சுவீடனின் நாட்டோ விண்ணப்பத்தை முடக்கிவரும் துருக்கி கேட்கும் F16 போர் விமானங்களை விற்க அமெரிக்கா திட்டம்.
உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பையடுத்து சுவீடன், பின்லாந்து நாடுகளின் நாட்டோ அமைப்பு பற்றிய நிலைப்பாடு மாறியது. இரண்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து நாட்டோ அமைப்பில் சேர்ந்துகொள்ள விண்ணப்பங்களை அனுப்பி அவை பெரும்பாலான நாட்டோ அமைப்பு அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. துருக்கி மட்டுமே அந்த விண்ணப்பங்களை முடக்கி வருகிறது. துருக்கியின் நிலைப்பாட்டை மாற்ற அவர்கள் கடந்த சில வருடங்களாகவே கொள்வனவு செய்ய விரும்பிவரும் போர் விமானங்களை அவர்களுக்கு விற்க அமெரிக்கா முடிவெடுக்கலாம் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நாட்டோ அமைப்பில் சுவீடனை சேர்க்க மறுக்கும் காரணமாக, துருக்கி சொல்லும் காரணம், தாம் தேடிவரும் தீவிரவாதிகளுக்குச் சுவீடன் தனது நாட்டில் பாதுகாப்பாக வாழ இடங்கொடுத்து வருவதே என்கிறது துருக்கி. ஆனாலும் உண்மையான காரணம் துருக்கி கொள்வனவு செய்ய விரும்பும் நவீத அமெரிக்கப் போர்விமான ரகமான F16 ஐ அவர்களுக்கு விற்க அமெரிக்கா சில வருடங்களாகவே மறுத்து வருவதே என்று கருதப்படுகிறது.
சுவீடன் பிரதமர் உட்பட ஒரு அரசாங்கக் குழுவினர் கடந்த சில வாரங்களாகவே துருக்கிய அரசின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துச் சுவீடனின் நாட்டோ விண்ணப்பத்தை அங்கீகரிக்கும்படி கேட்டுக்கொண்டனர். துருக்கிய ஜனாதிபதியோ எதற்கும் அசைந்து கொடுக்காமல் சுவீடனில் வாழும் துருக்கிய அரச விமர்சகர்கள் சிலரைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கோரி வருகிறார். அரசியல் காரணமாகச் சுவீடனில் புகலிடம் பெற்று வாழும் குறிப்பிட்ட துருக்கிய குடிமக்களைத் துருக்கியிடம் கையளித்தால் அவர்கள் சிறைக்கனுப்பப்படலாம், கொல்லப்படலாம் என்ற காரணம் காட்டிச் சுவீடனின் நீதித்துறை அதை மறுத்துவிட்டது.
சுவீடனின் நீதித்துறையானது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்துவரும் அமைப்பு. அதற்கு ஆணையிடும் உரிமை தமக்கு இல்லை என்று கூறிச் சுவீடன் அரசு துருக்கியின் கோரிக்கையை ஏற்க மறுத்திருக்கிறது. துருக்கிய ஜனாதிபதி தொடர்ந்தும் விடாப்பிடியாக இருப்பதாலேயே அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் F16 விமானங்களை விற்பது பற்றிய விடயத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்லலாம் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
கிரீஸுக்கு அமெரிக்கா விற்கவிருக்கும் போர் விமானங்களுடன் சேர்த்து, துருக்கி கோரும் F16 விமானங்களையும் விற்கும் ஒப்பந்தம் வரும் நாட்களில் ஜோ பைடனால் கைச்சாத்திடப்படலாம் என்று அமெரிக்கச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுமார் 20 பில்லியன் டொலர்கள் பெருமதியான அந்த ஒப்பந்தங்களே சமீப காலத்தில் அமெரிக்கா செய்துகொள்ளும் மிகப்பெரிய ஆயுதத் தளபாட விற்பனையாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்