இலஞ்சம் கொடுக்கப்படுகிறதா?
பிரபஞ்சத் தாய்
அடி எல்லை மாரியம்மா – நீ
எழுந்து ஓடி வாம்மா
இங்கே குற்றங்குறை
கூடிப்போச்சு … சும்மா
கும்மாளந்தா போடலாச்சு …
உம்பேரைச் சொல்லிக்கிட்டே
ஊரை ஏய்க்கப் பாக்கிறான்
உருப்படதா வழியைச் சொல்லி
காசு பணம் சேக்கறான் …
அடி எல்லை மாரியம்மா – நீ
எழுந்து ஓடி வாம்மா …
கலப்படமும் , விஷங்களுமாய்
உணவு இன்று ஆனதே …
தன்னாலே நோயத் தூண்டி
தறுதலையாய் போனதே …
இன்று மனிதம்
தறுதலையாய் போனதே …
எல்லாச் செயலும் உன் செயலாம்
என்று சொல்லிச் சொல்லியே
இவன் பாவங்களைச் செய்யுறான்
உனக்குக் கூட லஞ்சம் கொடுத்து
உனது கண்ணைக் கட்டப் பார்கிறான் …
அடி எல்லை மாரியம்மா – நீ
எழுந்து ஓடி வாம்மா …
இனிமேலும் பொறுக்காதே …
நீ கல்லாகிக் கிடக்காதே …
ஏய்பவனின் முகத்திரைய
நீ இப்போதே கிழிக்க வா …
இங்கே ஏராளம் உன் படைப்பில்
உயிர் நொந்து சாவதோ ?
நீ எதையுமே காணாத பாசமற்ற
தாயாகக் கிடப்பதோ …?
அடி எல்லை மாரியம்மா – நீ
எழுந்து ஓடி வாம்மா …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052