இந்திய எல்லைகளில் தாக்க மியான்மார் தீவிரவாதிகளுக்குச் சீனா உதவுகிறதா?
தனது மியான்மார் எல்லைகளில் மியான்மார் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடாத்தச் சீனா உதவி வருவதாக இந்திய அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஏற்கனவே சீனாவுடன் எல்லைகள் சம்பந்தமான இழுபறிகளில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு அச்சச்சரவுகளை மேலும் சிக்கலாக்கலாம்.
யுனைட்டட் வா ஸ்டேட் இராணுவம் என்ற மியான்மார் அரசுக்கெதிரான மாவோ கம்யூனிஸ இயக்கம், அரக்கான் விடுதலைப் போராளிகள் என்ற இந்தியா, மியான்மார் அரசுகளுக்கெதிராகப் போராடும் ரோஹிஞ்யா இனத்தினரின் அமைப்பு ஆகியவைகளுக்குச் சீனா ஆயுதங்கள், நிதி, ஆலோசனைகள் வழங்கி உதவி செய்து வருகின்றது என்பதே இந்திய அரசின் குற்றச்சாட்டாகும்.
பாகிஸ்தான், சீனாவுடனான இந்திய எல்லை 14,000 கி.மீற்றருக்கும் அதிகமானது. அவ்வெல்லைகளில் சில பகுதிகள் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அப்பிராந்தியங்களில் அவர்களுடைய எதிர்கால அரசியல், வர்த்தக நோக்கங்களுக்காக மிகவும் முக்கியமானது. அதனால் இரண்டு நாடுகளுமே மியான்மாரில் தமது பலத்தை விஸ்தரிக்க முயற்சி செய்து வருகின்றன. வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார உதவிகளை எதிர்பார்க்கும் மியான்மார் இரண்டு பக்கங்களிடையேயும் சமமாக நடக்க முயன்று வருகிறது.
இந்தியாவின் நாகாலாந்து பிராந்தியத்தில் சமீபத்தில் பல தாக்குதல்கள் நடந்திருப்பதாகச் சுட்டிக்காட்டும் இந்தியா அப்பகுதி எல்லைகளில் தனது இராணுவத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அப்பிராந்தியத்தில் இயங்கும் வா ஸ்டேட் ஆர்மியின் இயக்கத்தினர் தமக்குச் சீனா உதவிகளெதுவும் செய்வதில்லை என்று மறுத்தாலும் மாவோ கம்யூனிஸ்டுகளான அவர்களின் முக்கிய இணை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்