ஈரான் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முடியாமல் அமெரிக்க தடுக்கிறது.
உலகின் 172 நாடுகள் ஒன்று சேர்ந்து கொவிட் 19 தடுப்பு மருந்து ஆராய்ச்சிக்கும், கொள்வனவுக்கும் உதவுவதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மூலமாக ஸ்தாபித்த COVAX ஒன்றியம் மூலம் தாம் தடுப்பு மருந்து வாங்குவதற்கு அமெரிக்க அரசு தடைக்கற்களை உண்டாக்குவதாக ஈரான் குற்றஞ்சாட்டுகிறது.
டிரம்ப் பங்கெடுக்க மறுத்து ஒதுங்கிக்கொண்ட COVAX ஒன்றியத்தில் பங்கெடுக்க ஈரான் விரும்பினாலும் அதற்கான பணத்தைச் செலுத்த இயலாமல் உலகின் வங்கிகள் மூலமாக அமெரிக்க அரசு ஈரானின் பொருளாதாரக் கரங்களைக் கட்டிப் போடுவதாகக் குறிப்பிடுகிறார் ஈரானின் மத்திய வங்கித் தலைவர் அப்துல்நஸார் ஹெம்மதி.
ஈரான் அணு ஆயுதங்களுக்கான தனது ஆராய்ச்சிகளைக் கைவிட வேண்டுமென்ற கட்டாயத்துடன் அமெரிக்கா அதன் வர்த்தகம், பொருளாதாரம் மீது கடும் கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கிறது. அதை மீறி ஈரானுடன் வர்த்தகங்களில் ஈடுபடும் நாடுகளும், பொருளாதாரப் பரிமாற்றத்தில் ஈடுபடும் வங்கிகளும் அமெரிக்காவால் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. அதனால் தான் தாம் கொவிட் 19 தடுப்பு மருந்தை வாங்க முயற்சிகள் செய்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் உண்டாக்க இயலவில்லை என்கிறது ஈரான்.
மத்திய கிழக்கில் படு மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஈரானின் கொவிட் 19 மரணங்கள் உத்தியோகபூர்வமாக 50,000 ஐக் கடந்துவிட்டன. மூன்றாவது அலைக் கொரோனாப் பரவலால் தற்போதைய நிலையில் ஒரு லட்சம் பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான எண்ணிக்கை இரண்டு மடங்குகளுக்கும் அதிகமானது என்று ஈரானின் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனாலும், இன்னும் இரண்டு வருடங்களுக்கு அவர்களுக்குத் தடுப்பு மருந்து கிட்டும் வழியில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்