கொவிட் 19 க்கான Sinopharm CNBG இன் தடுப்பு மருந்து 86% நம்பத்தகுந்தது என்று எமிரேட்ஸ் அரசு அறிவிக்கிறது.
எமிரேட்ஸ் நாட்டின் [MOHAP] மக்கள் ஆரோக்கிய, தொற்று நோய் பரவல் தடுப்பு அமைச்சு சீன நிறுவனமான Sinopharm CNBG கண்டுபிடித்த கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பாவித்துத் தான் நடாத்திய மூன்றாம் கட்ட தடுப்பு மருந்து ஆராய்ச்சியின் மூலம் அந்த மருந்து 86 % விகிதம் நம்பத்தகுந்தது என்று தெரியவந்திருப்பதாக அறிவிக்கிறது.
செப்டம்பர் மாதம் முதல் கொவிட் 19 மருத்துவ சேவையிலிருப்பவர்களுக்கும், சீன இராணுவத்தினருக்கும் பாவிக்கப்படுவதற்காக அவசர கால அனுமதி பெற்ற இந்தத் தடுப்பு மருந்தைச் சீன அரசின் வேண்டுகேளுக்கிணங்கள் எமிரேட்ஸ் தனது மருத்துவ ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதாகத் தெரிகிறது. 125 நாடுகளைச் சேர்ந்த சுமார் 31,000 பேரை எமிரேட்ஸ் தனது தடுப்பு மருந்து மனித ஆராய்வின் மூன்றாம் கட்டப் பரீட்சையில் பாவித்ததாக அறிவிக்கிறது.ஷேய்க் முஹம்மது பின் ரஷீத் அல் மக்தூம், ஷேய்க் அப்துல்லா பின் ஸாயத் அல் நஹ்யான், நூறா அல் காபி போன்று பல முக்கிய அரச குடும்ப மற்றும் அமைச்சர்களும் குறிப்பிட்ட தடுப்பு மருந்தின் பரிசீலனைக்குத் தங்களை உட்படுத்தியதாகத் தெரிகிறது.