ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவுசெலவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான வரசெலவுத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தமது நிராகரிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக இழுத்தடித்து வந்த போலந்தும், ஹங்கேரியும் அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டு அதை ஏற்றுக்கொண்டன.
வரவிருக்கும் ஏழு வருடங்களுக்கான ஒன்றியத்தின் வரவுசெலவுத்திட்டம் வழக்கமான வரவுசெலவுத்திட்டங்களை விட இரண்டு விடயங்களில் முக்கியமாக வித்தியாசமானவை. ஒன்று, அத்திட்டத்தில் ஒன்றிய நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுகளினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான உதவி நிதி இணைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, இந்த நிதியிலிருந்து பணம் பெற விரும்பும் நாடுகள் தமது நாடுகளில் மனித உரிமைகளை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரலாகாது. வரவு செலவுத் திட்டத்திலுள்ள மொத்த நிதியின் பெறுமதி இதுவரை எப்போதுமில்லாத அளவு பாரிய 1,800 பில்லியன் எவ்ரோக்களாகும்.
தமது நாடுகளின் பெரும்பாலான ஊடகங்களை அரசுகளின் கைகளில் கொண்டுவந்து, ஆள்பவருக்கு ஆதரவான தீர்ப்புக்களைக் கொடுக்க மறுக்கும் நீதிமன்றங்களின் நீதிபதிகளை வெளியேற்றி, ஒன்றியத்துக்குள் வரும் அகதிகளைத் தமது நாட்டினுள் எடுக்க மறுக்கும் ஹங்கேரியையும், போலந்தையும் தண்டிக்கவே “மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு உதவி நிதி கிடைக்காது,” என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. எனவே தான் அதை ஹங்கேரியும், போலந்தும் இடை மறித்து வந்தன.
கடைசியில் “மனித உரிமைகள் நாட்டினுள் மீறப்பட்டன என்று ஐரோப்பிய நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் தான் நிதி மறுப்பு,” என்ற ஜேர்மனியின் கருத்தை ஏற்றுக்கொண்டு போலந்தும், ஹங்கேரியும் வரவுசெலவுத்திட்டம் நிறைவேறுவதை அனுமதித்தன.
சாள்ஸ் ஜெ.போமன்