ஹொங்கொங்க் அரச உத்தியோகத்தர்கள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்குவதாகச் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டப்படுகிறார்கள்!
மனித உரிமைகளைத் தொடர்ந்தும் பேணவேண்டி இவ்வருடம் நாடெங்கும் காட்டுத்தீ போலப் பரவிய கோரிக்கைகளையும், போராட்டங்களையும் ஒடுக்கிய பின்னர் ஹொங்கொங்கின் மீது சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அவைகளை விமர்சிக்கும் சுதந்திர ஊடகங்களின் பின்னணியிலிருப்பவர்களைக் கடந்த வாரம் கைது செய்தார்கள். பாடசாலையில் கல்விக்கான புத்தகங்களிலெல்லாம் ஹொங்கொங்க் சீனாவின் ஒரு பாகமென்றும் அதன் சட்டங்களுக்கு ஏற்ப நடக்கவேண்டுமென்றும் மாற்றிப் பதிக்கப்பட்டுவருகின்றன.
அடுத்த கட்டமாக நாட்டின் அரசாங்கத் துறையில் வேலையில் இருப்பவர்களெல்லாம் நாட்டின் சீன ஆதரவு அரசியலமைப்புக்குப் பணிவதாகக் கட்டாயமாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அரச துறைகளில் பணிசெய்பவர்களில் பெரும்பாலானோர் ஜனநாயகக் கோட்பாடுகள் வேண்டி நடந்த போராட்டங்களில் பங்குபற்றியவர்களே. எனவே அவர்களை அரசுக்குப் பணிவதாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும்படி பணிப்பது அவசியமென்று கருதுகிறது ஹொங்கொங்க் அரசு. சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள மறுப்பவர்கள் தமது பதவிகளை இழக்கத் தயாராக இருக்கவேண்டுமென்று சுற்றாணை சுட்டிக்காட்டுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்