சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் கடத்தப்பட்ட நைஜீரியப் பாடசாலைப் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
கடந்த வாரத்தில் நைஜீரியாவின் கஸ்தீனா என்ற நகரிலிருக்கும் அரச இரண்டாம் தர விஞ்ஞான பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஆயுதபாணிகளாக வந்த ஒரு கூட்டத்தினர் அங்கிருந்து சுமார் 400 சிறுவர்களைத் தங்களுடன் கடத்திக்கொண்டு அருகேயுள்ள காட்டுப்பிரதேசத்தினுள் சென்று ஒளிந்துகொண்டார்கள். அதையறிந்து அங்கே அழைக்கப்பட்ட நைஜீரிய இராணுவத்தினர் காடுகளுக்குள் நுழைந்து கடத்திச் சென்றவர்களுடன் ஆயுதப் போரில் சில நாட்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
அச்சமயத்தில் அப்பிராந்தியத்தில் ஏற்கனவே இதே போன்ற செயல்களைச் செய்திருந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான பொக்கோ ஹறாம் என்று குழுவிலிருந்து வெளியிடப்பட்டதான ஒரு குறும்படம் அப்பிள்ளைகளை விடுவிப்பதற்காக குறிப்பிட்ட தொகையைக் கேட்டிருந்தது. ஆனால், உண்மையிலேயே அது அக்குழுவினரின் கோரிக்கையா என்பதைத் தெளிவாக அறியமுடியவில்லை. தனியான பிள்ளைகளைக் கடத்திச் சென்று அவர்களை விடுவிப்பதற்காகப் பணம் கோரும் வெவ்வேறு குழுக்களும் அங்கே இயங்கி வருகின்றன.
கஸ்தீனா பிரதேசத்தின் கவர்னர் அமினு மஸாரி பிள்ளைகளைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இயங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது அப்பிள்ளைகளில் சுமார் 300 பேர் திரும்பக் கிடைத்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. அப்பில்ளைகளை விடுவித்ததற்காகக் கடத்தல்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கவர்னர் அறிவித்திருக்கிறார். விடுவிக்கப்பட்டவர்கள் நலமுடம் இருப்பதாகவும் பணயத்தொகை எதுவும் கொடுக்கப்படவில்லையென்றும் அறிவித்த மஸாரி யாரால், எதற்காகக் கடத்தப்பட்டார்கள், கடத்தல்காரர்களுக்கு எதைக் கொடுத்துப் பிள்ளைகள் விடுவிக்கப்பட்டார்கள் போன்றவை பற்றி எதுவும் சொல்லவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்