கிரஹாம் மலைப்பகுதி சிகப்பு அணில்களில் 100 தான் மிச்சமிருக்கின்றன.
Mt. Graham red squirrel என்றழைக்கப்படும் அரிஸோனா மாநிலத்துக் காடுகளில் வாழும் ஒரு வித சிகப்பு அணில்கள் 1987 ம் ஆண்டில் “அழிந்துபோகும் உயிரினங்கள்” என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டவை. இந்த வகையான அணில்கள் 1950 லேயே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டவை. ஆனால், 1970 ஆண்டுகளில் மீண்டும் அக்காட்டுப் பகுதிகளில் காட்சியளித்தன. அவைகளின் எண்ணிக்கை மீண்டும் குறைய ஆரம்பித்தது.
அவைகள் வாழப் பொருத்தமான இயற்கைப் பிராந்தியங்கள் அழிந்து வருகின்றன. அவற்றுடன் அதே பகுதிகளில் வாழும் வேறு வகையான அணில்கள் உட்பட்ட உயிரினங்களும் அவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. தவிர, சமீபத்தில் அரிஸோனா மாநிலக் காடுகளில் பரவிய காட்டுத்தீயாலும் அவை வாழும் மலைப்பிராந்தியம் அழிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் எடுக்கப்பட்ட கணிப்புக்களில் மூலம் சுமார் 109 அணில்களே மீதமிருக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்காவின் இயற்கைவளப் பாதுகாப்பு அமைப்பு இந்த வகை அணில்களைப் பற்றிய பிரத்தியேக ஆராய்வொன்றை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் மூலம் இவ்வகை அணில்கள் பற்றி மேலும் அறிந்துகொண்டு அவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்று தீர்மானிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்