லத்தீன் அமெரிக்க நாடுகள் எந்தக் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு மாலை போடப் போகின்றன?
லத்தீன் அமெரிக்க நாடுகளின் புள்ளிவிபரப்படி இதுவரை 450,000 பேரின் உயிரைக் கொவிட் 19 எடுத்திருக்கிறது. பல அரசியல் பிரச்சினைகள் கொண்ட அந்த நாடுகளில் வேகமாகப் பரவிவரும் இப்பெருவியாதியைப் பற்றிய தெளிவான விபரங்கள் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஐரோப்பிய, வட அமெரிக்க நாட்டு அரசுகள் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வாங்க, விநியோகிக்க ஆரம்பித்துவிட்டிருக்கும்போது அந்த நாட்டு மக்களிடையேயும் தமது அரசுகள் விரைவில் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அதனால் அந்தச் சந்தையில் தத்தம் மருந்துகளை விற்பதில் அமெரிக்க, சீன, ரஷ்ய தடுப்பு மருந்துகள் போட்டி போடுகின்றன.
தென்னமெரிக்காவின் பெரிய நாடான பிரேசில் அதிக இழப்புகளையும் சந்தித்த நாடு. அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் நாட்டின் மாநிலங்களும், மத்திய அரசும் குடிமக்களைக் கட்டாயமாகத் தடுப்பு மருந்து எடுக்கச் செய்யலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் வயது வராதவர்களுக்கு அவரவர் பெற்றோர்கள் தடுப்பு மருந்து கொடுக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
கட்டாயமாகத் தடுப்பு மருந்து எடுக்கவேண்டும் என்ற தீர்ப்பு நாட்டின் ஜனாதிபதியின் விருப்பத்துக்கு எதிரானதாகும். நாட்டு மக்களுக்காக அஸ்ரா – ஸெனகாவின் தடுப்பு மருந்தை வாங்க பிரேசில் ஜனாதிபதி முடிவுசெய்திருக்கிறார். அத்துடன் மற்ற தடுப்பு மருந்துகளையும் வாங்கலாம் என்ற திட்டம் இருக்கிறது.
ஆர்ஜென்ரீனாவின் ஜனாதிபதி தான் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை வாங்கப்போவதாகவும் அதைத் தானே முதலாவது ஆளாகப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் அறிவித்தார். ஆனால், 61 வயதாகிவிட்ட ஜனாதிபதிக்கு ரஷ்ய அதிபர் புத்தின் அளித்த பதில் அதிரவைத்தது. “ரஷ்யாவின் தடுப்பு மருந்து இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பாவிக்கப்படலாமா என்று பரிசீலிக்கவில்லை,” என்ற புத்தின் சொன்னதால் ஆர்ஜென்ரீனா Pfizers/Biontech, அஸ்ரா – ஸெனகா நிறுவனங்களிடம் கொள்வனவு செய்வது பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது.
பல இறப்புக்களால் பாதிக்கப்பட்ட மெக்ஸிகோவும், சிலேயும் Pfizers/Biontech நிறுவனத்தின் மருந்தை லத்தீன் அமெரிக்காவில் முதல் முதலாக அங்கீகரித்த நாடுகளாகும். தவிர, அவர்கள் பெருமளவில் சீனாவின் தடுப்பு மருந்தையும் கொள்வனவு செய்து வைத்திருக்கிறார்கள்.
நிக்காராகுவா, கியூபா, நிகாராகுவா ஆகிய நாடுகளோ அமெரிக்காவின் எதிரிகள். அவர்கள் கொள்வனவு செய்யப்போவது ரஷ்யாவின் மருந்தைத்தான்.
சாள்ஸ் ஜெ. போமன்