பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி, ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு, கர்ப்பிணிகள் குறித்தும் அவதானம்!
பிரான்ஸின் சுகாதார உயர் ஆணையம் (Haute Autorité de la Santé – HAS) ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசியைப் பொதுமக்கள் பாவனைக்காக சந்தைப்படுத்துவதற்கு அனுமதிவழங்கியிருக்கிறது.
தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பமாக உள்ளன.முதியோர் உட்பட 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை அனுமதித்திருக்கும் சுகாதார உயர் ஆணையம், நீண்டகால ஒவ்வாமை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி தவிர்க்கப்படவேண்டும் என்று தனது சிபாரிசு அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார் விடயத்தில் கைக்கொள்ளப்படவேண்டிய விதிமுறைகளையும் ஆணையகம் தனது அறிவுறுத்தல்களில் உள்ளடக்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. “அனாபிலாக்டிக்”(anaphylaxis) என்கின்ற ஒவ்வாமையின்(allergy) கடுமையான குணங்குறி கொண்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பாக சுகாதார ஆணையகம் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.
“அனாபிலாக்டிக்” ஒவ்வாமை கொண்ட நோயாளிகளில் தடுப்பூசியின் தீவிரமான பக்கவிளைவுகளாக தோல் அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம், செரிமான அறிகுறிகள் மற்றும் அசௌகரியங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள மொத்த ஒவ்வாமை நோயாளிகளில் ஐந்து சதவீத மானவர்களில் மட்டுமே இத்தகைய பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இல்-து- பிரான்ஸ் பிராந்தியத்தில் மூதாளர் காப்பகம் ஒன்றில் முதலாவது தடுப்பூசி ஏற்றும் வைபவம் இடம்பெறும்.
பெல்ஜியத்தில் உள்ள பைசர் மருந்துத் தொழிற்சாலை ஒன்றில் இருந்து பொலீஸ் கொமாண்டோக்களின் பாதுகாப்புடன் தரைவழியாக குளிரூட்டி கொள்கலன் வாகனங்களில் எடுத்துவரப்படுகின்ற லட்சக்கணக்கான தடுப்பூசி புட்டிகள் நாடெங்கும் ரகசியமான சில இடங்களில் களஞ்சியப் படுத்தப்படவுள்ளன.
தடுப்பூசி களஞ்சியப்படுத்தப்படும் இடங்கள் அவற்றின் விநியோக வழிகள், மற்றும் தடுப்பூசி ஏற்றும் சுகாதார நிலையங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தடுப்பூசி விநியோக மார்க்கங்களில் மாபியா குழுக்கள், கொள்ளையர்கள் மற்றும் தடுப்பூசிக்கு எதிரானவர்களால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று ஜரோப்பிய பொலீஸ் (ஈரோபொல்) சேவை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
(படம் :பெல்ஜியத்தில் இருந்து பிரான்ஸுக்கு தடுப்பூசி எடுத்துவரப்படும் வழிமுறைகளை விளக்கும் Infographie Visactu வரைபடம்)
குமாரதாஸன். பாரிஸ்.