அஸ்ரா – ஸெனகாவும், ஸ்புட்னிக் V ம் சேர்ந்து தடுப்பு மருந்துகள் பரிசோதனை.
கொவிட் 19 க்காக ரஷ்ய நிறுவனமான Gamaleya Research Institute தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை அஸ்ரா செனகா நிறுவனம் கண்டுபிடித்த மருந்துடன் சேர்த்துப் பரிசீலிக்க வேண்டிக் கோரியிருந்ததை அஸ்ரா செனகா நிறுவனம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
ஒரே விதமான தடுப்பு மருந்து ரகங்களான [vector vaccine]இவைகளிரண்டையும் சேர்த்து ஒருவருக்குத் தடுப்பு மருந்து போடுவதன் மூலம் மேலும் பலமான பாதுகாப்பை ஒருவருக்குக் கொடுக்க முடியுமா என்று பரீட்சிப்பதே இதன் நோக்கமாகும். இந்த வகைத் தடுப்பு மருந்துகளில் ஆபத்தில்லாத ஒரு பாதுகாப்புக் கிருமியுடன் கொரோனாக் கிருமியின் பகுதிகள் சேர்த்து ஒரு மனிதரில் செலுத்தப்படுகின்றன. அதன் மூலம் மருந்தை எடுப்பவரின் உடலில் பாதுகாப்புப் புரதங்கள் உருவாகுவதை ஊக்குவிப்பதே குறிக்கோளாகும்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினருடன் சேர்ந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் செயற்பட்டு வரும் அஸ்ரா செனகா நிறுவனம் “இரண்டு தடுப்பு மருந்துகளை ஒன்றிணைப்பதன் மூலம் வேறு பல வழிகளிலும் ஒரு மனிதருக்கு உதவும் சந்தர்ப்பங்களை உண்டாக்கலாம், என்பதாலேயே இந்தக் கூட்டுறவு முயற்சியில் இறங்கியிருக்கிறோம்,” என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு தடுப்பு மருந்தை மேலும் பலமாக்கும் பரீட்சைகள் டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்