லூஜைன் அல் – ஹத்தூலுக்கு ஐந்து வருடச் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பு
சவூதி அரேபியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும், பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்று கேட்டுப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூல் மே 18 2018 இல் கைதுசெய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
வரவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் சவூதி பற்றிய அரசியல் கருத்தை இந்தத் தீர்ப்பு மேலும் வலுப்படுத்துமென்று கருதப்படுகிறது. பட்டத்து இளவரசனாகத் தெரிவு செய்யப்பட்டபின் இன்றைய சவூதிய அரசனின் மகனான முஹம்மது பின் சல்மான் சவூதி அரேபியாவை ஒரு மிதவாத இஸ்லாமிய நாடாக்கப் போவதாகப் பிரகடனப்படுத்தியிருந்தாலும் கூட அவ்விடயத்தில் தனது திட்டங்களுக்கும், நேர அட்டவணைக்கும் இடையூறாக இருக்கிறவர்கள் எவரையும் கடுமையாகத் தண்டிக்கத் தயங்கவில்லை என்பதை உலகம் காண முடிந்தது.
டிரம்ப் அரசின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருப்பதால் நாட்டில் மனித உரிமை கோருபவர்களைத் தயக்கமின்றித் தண்டித்து வந்தது சவூதி அரசு. அவர்களில் பெண்கள் உரிமைக்காகப் போராடிய லூஜைன் அல் – ஹத்தூலும் முக்கியமானவர். அரசுக்கு எதிராகக் கலகமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு ஐந்து வருடங்களும் எட்டு மாதங்களும் சிறைத்தண்டனையைக் கொடுத்த நீதிமன்றம் ஏற்கனவே அவர் பாதுகாப்புச் சிறையில் வைக்கப்பட்டிருந்த காலத்தை அதிலிருந்து தள்ளுபடி செய்திருக்கிறது.
டிசம்பர் 8 திகதியன்று சவூதி – அமெரிக்க மருத்துவர் வலீத் அல் பித்தைஹிக்கு ஆறு வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்து சவூதிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 2017 இல் சவூதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட அவரை சுமார் இரண்டு வருடங்கள் எவ்விதக் குற்றச்சாட்டுமின்றிப் பாதுகாவலில் வைத்தபின் “எகிப்திய ஜனாதிபதியை விமர்சித்தார், தீவிரவாதக் குழுவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு ஆதரவாக இருந்தார்,” என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
வலீத் அல் பித்தைஹியை விடுதலை செய்யும்படி அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டதை சவூதி அரேபியா உதாசீனம் செய்துவிட்டது. லூஜைன் அல் – ஹத்தூலையும் விடுதலை செய்யவேண்டுமென்று சர்வதேச அரசுகள் பல வேண்டிக்கொண்டும் சவூதி அரேபியா அதை மறுத்து வந்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்