ஜேர்மனியில் ஆயிரம் உயிரிழப்புகள்!பொது முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்?
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இதுவரை இருந்திராத எண்ணிக்கையில் ஒரு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.புதன்கிழமை வெளியான புள்ளி விவரங்களின்படி 24 மணிநேரங்களில் அதி கூடிய எண்ணிக்கையாக 1,129 வைரஸ் தொற்று மரணங்கள் பதிவாகி உள்ளன.இதே காலப்பகுதியில் 22ஆயிரத்து 459 தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்று நோய்களுக்கான றொபேர்ட கொச் நிலையம் (Robert Koch Institute-RKI) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஜேர்மனி அதன் இரண்டாவது பொது முடக்கக் கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி உள்ள நிலையில் அங்கு வைரஸ் பரவல் நிலைவரம் மோசமடைந்து செல்கிறது. கடைகள் உணவகங்கள், அருந்தகங்கள், களியாட்ட மையங்கள் மற்றும் பாடசாலைகள், பகல் பராமரிப்பு நிலையங்கள் போன்றவை மாநிலங்கள் எங்கும் மூடப்பட்டுள்ளன.
ஜனவரி 10 ஆம் திகதிவரை இந்தக் கட்டுப்பாடுகள் அங்கு அமுலில் இருக்கும். ஆனால் தொற்றுக்களும் உயிரிழப்புகளும் உயர்ந்து செல்வதால் இந்தத் திகதிக்குப் பின்னரும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து நீடிக்கவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
பொது முடக்க நீடிப்புத் தொடர்பாக மத்திய அரசு மாநில ஆட்சியாளர்களுடன் ஜனவரி 5ஆம் திகதி கலந்தாலோசிக்க உள்ளது. ஜரோப்பாவின் ஏனைய நாடுகளைப் போன்றே ஜேர்மனியும் “பைசர் – பயோஎன்ரெக்” வைரஸ் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.