நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
நோர்வேயின் சமீப காலத்தில் இப்படியொரு மோசமான மண்சரிவு உண்டாகியதில்லையென்று குறிப்பிடப்படுகிறது. குடிமக்கள் வசிக்கும் மாடிவீடுகள் 15 இடிபாடுகளுக்குள் மாட்டிச் சிதைந்தன. 5 வீடுகள் நிலத்தில் ஏற்பட்ட ஓட்டைக்குள் வீழ்ந்துவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. அப்பிராந்தியத்தில் வசித்த சுமார் 900 பேரை ஆபத்துதவிப் படை வேறு இடங்களுக்கு மாற்றியிருக்கிறது. மேலும் 600 பேர்களையாவது அங்கிருந்து வெளியேற்றவேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு டசின் பேராவது காயமடைந்திருக்கிறார்கள்.
புதனன்று அதிகாலை நான்கு மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அப்பகுதியில் மழை கலந்த பனி தொடர்ந்து விழுந்துகொண்டிருப்பதால் மேலும் சரிவுகள் தொடர்ந்தும் ஏற்படலாமென்று எச்சரிக்கை செய்யப்படுகிறது. தொடர்ந்தும் காணாமல் போயிருப்பவர்களில் சிலர் குழந்தைகள் என்று தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்