லொய்ட் ஆஸ்டின் என்ற கறுப்பின அமெரிக்கர் பெந்தகன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அமெரிக்கச் சரித்திரத்தில் முதல் தடவையாக கறுப்பின அமெரிக்கர் ஒருவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். 2003 இல் ஈராக் மீதான போரில் அமெரிக்க இராணுவத்துக்குத் தலைமைதாங்கி பாக்தாத் நகரைக் கைப்பற்றிய ஜெனரல் லொய்ட் ஒஸ்டின்.
ஜனாதிபதியாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடன் சிறுபான்மை இனத்தினருக்கு நாட்டின் முக்கிய தலைமைப் பதவிகளில் கணிசமான இடங்களைக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்திருக்கிறது. அதன் விளைவே பலரும் அந்த இடத்தில் எதிர்பார்த்திருந்த மிஷல் புளொர்னொய்க்கு அந்தப் பதவியை பைடன் கொடுக்காததாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
2016 இல் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற லொய்ட் ஆஸ்டின் 67 வயதானவர். நீண்டகாலமாக அமெரிக்க செனட் சபையில் வெவ்வேறு வெளிநாட்டுறவுப் பதவிகளிலிருந்த ஜோ பைடன் லொய்ட் ஆஸ்டினுடன் நெருங்கிப் பணியாற்றியிருக்கிறார் என்பதால் இருவரும் ஒருவரொருவர் மீது பரஸ்பர நம்பிக்கையுள்ளவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்