கிரீன்லாந்தில் ஆட்சி மாறியதும் யுரேனியச் சுரங்கங்களுக்குச் சிகப்புக் கொடி, சுதந்திர நாடாகும் வேட்கை.
1970 களிலிருந்து கிரீன்லாந்தை ஆண்டுவந்த ஷோசியல் டெமொகிரடிக் கட்சியினர் ஏப்ரல் மாதம் அங்கு நடந்த தேர்தலில் தோற்றுவிட்டார்கள். நாட்டின் இடதுசாரிகளும், பழங்குடியினரின் கட்சியும் சேர்ந்து அங்கே ஆட்சியமைத்திருக்கின்றன. பழங்குடியினரின் நீண்டகால வேட்கையான டென்மார்க்கிலிருந்து பிரிந்து தனியான நாட்டை உருவாக்குதல் மீண்டும் முக்கிய விடயமாகியிருக்கிறது. அதே சமயம் வெளிநாட்டுச் சுரங்க நிறுவனங்களை மட்டுப்படுத்தும் ஆசையும் எழுந்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 55,000 மட்டுமே. நாட்டின் தலை நகரான நூக்கில் மட்டும் 17,000 பேர் வாழ்கிறார்கள். நாட்டின் பெருமளவு நிலப்பரப்பு நிரந்தரப் பனிப்படலங்களின் கீழ் கிடக்கிறது. டென்மார்க்கின் கீழிருக்கும் கிரீன்லாந்தின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் எனலாம். அதனால் மட்டும் இயங்க முடியாத கிரீன்லாந்துக்கான மூன்றிலிரண்டு பகுதி பொருளாதாரத்தைத் தாங்குவது டென்மார்க்தான்.
மீன்பிடித்தலைத் தவிர சுரங்கத்தொழிலும் கிரீன்லாந்தில் இருக்கிறது. அதில் முதலீடு செய்திருப்பது பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே. காலநிலை வெம்மையாவதால் பனிமலைகள் உருகிவருவது பல நாடுகளுக்குக் கனிவளங்களை கிரீன்லாந்தில் வேட்டையாடும் ஆர்வத்தை ஊட்டியிருக்கிறது. அங்கே யுரேனியம் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிப்பதால் அதற்கான சுரங்கங்களை உருவாக்க விரும்பும் வெளிநாடுகள் பல. புதிய அரசானது அவர்களுக்கு மிகத் தெளிவான சிகப்பு விளக்கைக் காட்டிவருகிறது.
கிரீன்லாந்தின் சுற்றுப்புற சூழலைச் சுரங்கத்தொழில் மோசமாக்குவதுடன் அங்கு பழங்குடிமக்கள் செய்துவரும் விவசாய நிலத்தையும் அது பாழாக்கும் என்று அஞ்சுவதால் அதைத் தற்போதைய அரசு விரும்பவில்லை. அத்துடன் சுற்றுலாத் துறையை கிரீன்லாந்தில் அபிவிருத்தி செய்வதும் வெற்றிபெற்ற அரசின் ஒரு முக்கிய குறியாகும். சுரங்கங்கள் அதிகமாக இருப்பின், அதன் விளைவுகள் சூழலை மோசமாக்குவதாயின் சுற்றுலாப்பயணிகள் வருவது குறைவாக இருக்கும் என்பதும் ஒரு அச்சமே.
அதேசமயம் கிரீன்லாந்து தனி நாடாகவேண்டுமானால் அதன் பொருளாதாரத்தைத் தாங்க மீன்பிடித் துறை தவிர்ந்த வேறு துறைகளும் தயாராக்கப்படவேண்டும். அரசின் அந்தக் குறியை அடைய சுரங்க முதலீடுகளை அனுமதிப்பது ஒரு சாதகமான விளைவைக் கொடுக்கும். ஆனாலும், அந்த வழியில் செல்ல இடதுசாரிகளோ, பழங்குடியினரோ விருப்பம் காட்டவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்