கொலொனியல் பைப்லைன் கொம்பனி அதன் தொலைத்தொடர்புத் தளங்களைத் தாக்கியவர்களுக்கு மீட்புத் தொகை கொடுத்தது!
சமீப வருடங்களில் உலகின் பல நிறுவனங்களின் இணையத் தளங்களின் தொடர்புகளை வெளியேயிருந்து களவாகக் கைப்பற்றி அவைகளை விடுவிப்பதற்காக மீட்புத் தொகை கேட்கும் ஹக்கர்ஸ் என்றழைக்கப்படும் குழுக்களின் செயற்பாடு அதிகரித்து வருகிறது. அவைகளிலொன்றாக அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்திலுள்ள நகரங்களின் பாவிப்புக்கும், பல விமானங்களுக்கும் எரிபொருளை விநியோகிக்கும் நிறுவனமான கொலொனியல் பைப்லைன் கொம்பனியின் இணையத் தொலைத்தொடர்புத் தளத்தின் மீது தாக்கி அதைக் கைப்பற்றியிருக்கிறார்கள் இனம் தெரியாத நபர்கள்.
இத்தாக்குதலின் பின்னர் கொலொனியல் பைப்லைன் கொம்பனி தனது குளாய்களை இயக்க முடியாமல் போயிற்று. அதனால் அவர்களிடம் எரிபொருள் இருப்பினும் அதை உடன்படிக்கை செய்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க முடியாத நிலைமை. தளத்தைக் கைப்பற்றியவர்கள் கேட்டிருக்கும் தொகையைக் கொடுத்தால்தான் அவர்கள் தொலைத்தொடர் இணைப்புகளைப் பாவிக்க அவைகளைத் திறந்துவிடுவார்கள்.
கொலொனியல் பைப் கொம்பனி மீதான தாக்குதல் பற்றிய செய்திகள் வெளியானதும் அதன் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொண்ட எரிபொருள் சந்தையில் விலை அதிகமாக ஆரம்பித்தது. கடந்த வருடத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்கனவே 60 % எரிபொருள் விலை அதிகமாகியிருக்கிறது. கொலொனியல் பைப்லைன் கொம்பனி தனது குளாய்களின் கட்டுப்பாடு தன்னிடம் முழுவதும் திரும்பியபின் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்த பின்னரே விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றது. இந்த நிலை கடந்த வெள்ளியன்றே ஆரம்பமாகியது.
அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டும் சூடுபிடிக்கும் இச்சமயத்தில் கோடை விடுமுறையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பல நிறுவனங்களுக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால் அதன் விலை மேலும் அதிகமாகலாம். தமது தொலைத்தொடர்புகளைக் கைப்பற்றியவர்களுக்குத் தாம் மீட்புத் தொகையைக் கொடுக்கப்போவதில்லை என்று கொலொனியல் பைப்லைன் கொம்பனி குறிப்பிட்டு வந்தது.
ஆனால், ஒரு வாரமாகியும் எவ்விதத்திலும் நிலைமை மாறாததால் நிறுவனம் ஐந்து மில்லியன் டொலர்களை பிட்கொய்ன் நாணய மூலமாக மீட்புத் தொகையாகக் கொடுத்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி ஊடகம் தெரிவிக்கிறது. முன்னர் குறிப்பிட்டது போலல்லாமல் மீட்புத் தொகையைக் கொடுத்தது உண்மையா என்பது பற்றிய விபரங்களை அந்த நிறுவனம் இதுவரை தெரிவிக்கவில்லை.
குறிப்பிட்ட தாக்குதல் நடாத்தியவர்கள் ரஷ்யாவில் வாழ்பவர்கள் என்று தான் பலமாக நம்புவதாக ஜோ பைடன் குறிப்பிட்டார். அதே சமயம் அவர்களுக்குப் பின்னாலிருப்பது ரஷ்யாவின் அரசு அல்ல என்றும் சுட்டிக்காட்டினார். தம்மிடமிருக்கும் விபரங்களை ரஷ்ய அரசுடன் பகிர்ந்துகொள்ளப்போவதாகக் குறிப்பிட்ட அவர் பதிலுக்கு அமெரிக்கா அத்தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமென்றும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்