குவாந்தனாமோ சிறைமுகாமில் 16 வருடங்களிருந்த வயதான கைதி விடுவிக்கப்படுகிறார்.
தீவிரவாதக் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கைது செய்யப்பட்டு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளின்றி அமெரிக்காவின் குவாந்தனாமோ விசாரணை முகாமிலிருந்த 73 வயதான கைதியை விடுவிக்க சிறைச்சாலை விசாரணைக் குழு முடிவுசெய்திருக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஷைபுல்லா பராச்சா என்ற அவர் 16 வருடங்களாக உத்தியோகபூர்வமாக எந்தவிதக் குற்றமும் சுமத்தப்படாமல் அங்கே வைக்கப்பட்டிருந்தார்.
அந்தக் கைதியையும் இன்னும் இரண்டு கைதிகளையும் விடுதலை செய்வதற்காக எந்தவித காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை என்று ஷைபுல்லாவுக்கு வழக்கறிஞராக இருந்த ஷெல்பி சல்லிவன் -பென்னிஸ் தெரிவித்திருக்கிறார். அவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு எந்தவித சேதத்தையும் விளைவிக்கக்கூடியவர்களல்ல என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்த கட்டமாக பாகிஸ்தானிய அரசுடன் தொடர்புகொண்டு அமெரிக்கா ஷைபுல்லாவை மீண்டும் அவரது நாட்டுக்கு அனுப்புவது பற்றித் திட்டமிடும். அவரை ஏற்றுக்கொள்வதற்குப் பாகிஸ்தான் ஒத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
பாகிஸ்தானில் உடை தயாரிக்கும் நிறுவனமொன்றை வைத்திருந்த ஷைபுல்லா நியூ யோர்க்கிலும் சொத்துக்களைக் கொண்டிருந்த ஒரு பணக்காரராகும். அவரைத் தாய்லாந்தில் வைத்துக் கைதுசெய்து ஆப்கானிஸ்தானுக்குக் கொண்டுசென்று அங்கிருந்து குவாந்தனாமோவுக்குக் கொண்டுவந்தார்கள் அமெரிக்கர்கள்.
9/11 தாக்குதல்களில் ஈடுபட்ட இருவருக்கு அவர்களின் பணத்தை இடம் மாற்றுவது போன்ற விடயங்களில் ஷைபுல்லா ஈடுபட்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. தனக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லையென்று ஷைபுல்லா தொடர்ந்தும் மறுத்து வருகிறார்.
2002 இல் தீவிரவாதிகளையும், அது போன்றவர்களுக்கு உதவியவர்களையும் அடைத்துவைக்க அமெரிக்க அரசால் திறக்கப்பட்ட குவாந்தனாமோ சிறைமுகாமில் 2003 இல் சுமார் 700 பேர் அடைக்கப்பட்டிருந்தார்கள். அதை மூடுவதாக முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உறுதியளித்திருந்தாலும் தனது இரண்டு ஜனாதிபதித் தவணைகளில் அதை அவர் செய்யவில்லை.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் தேர்தல் வாக்குறுதியிலும் அவர் குவாந்தனாமோ சிறைமுகாமை மூடிவிட்டு அங்கிருப்பவர்களுக்கு ஒழுங்கான நீதிமன்ற விசாரணைகளுக்கு வழிவகுப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது அங்கே 40 பேர் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒன்பது பேரை விடுவிக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அப்துல் ரப்பானி என்ற இன்னுமொரு பாகிஸ்தானியரும், உத்மான் அப்த் அல்-ரஹீம் என்ற ஒரு யேமனியருமே தற்போது விடுதலைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் மேலுமிரண்டு கைதிகளாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்