அலபாமா மாநிலப் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டிருந்த யோகா, இனிமேல் அனுமதிக்கப்படும், நமஸ்தே இல்லாமல்!
யோகா என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்கமுடியாதது, கிறீஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானது போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டு அமெரிக்காவின் பழமைவாத மாநிலமான அலபாமாவில் அது அரச பாடசாலைகளில் 30 வருடங்களாகத் தடை செய்யப்பட்டிருந்தது. அத்துடன் அது நவீனகால மாற்றங்களால் ஏற்பட்ட தெளிவின்மை என்றும் விபரிக்கப்பட்டிருந்தது.
வெள்ளியன்று அலபாமாவின் ஆளுனர் கே ஐவி தனது மாநிலத்தின் அரச கல்விக்கூடங்களில் பெற்றோர்களின் அனுமதியுடன் யோகா கற்பிக்கலாம் என்று உத்தரவிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் விதிக்கப்பட்டிருக்கின்றன.
தமது பிள்ளைகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கலாம் என்று அனுமதிக்கும் பெற்றோர் அது ஒரு இந்து மதத்தின் பாகம் என்று புரிந்துகொண்டதாக எழுத்தில் உறுதிப்படுத்தவேண்டும். நமஸ்தே என்று சொல் பாவிக்கப்படலாகாது. சுலோகங்கள் பாவிக்கப்படலாகாது. யோகா முத்திரைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருக்கவேண்டும். தமது பாடசாலைகளில் யோகா கற்றுக்கொடுக்கலாகாது என்று பாடசாலை நிர்வாகம் முடிவுசெய்தால் அது தவிர்க்கப்படலாம்.
சாள்ஸ் ஜெ. போமன்