பறந்து கொண்டிருந்த விமானத்தை மறித்து இறக்கி இளம் ஊடகர் கைது. பெலாரஸ் நாட்டு அரசின் அடாவடி.
பெலாரஸ் நாட்டின் வான் பரப்பில்பறந்துகொண்டிருந்த ‘றயன் எயார்’ விமானம் (Ryanair flight) ஒன்றை வானில் வழிமறித்த அந்நாட்டின் விமானப் படை வலுக்கட்டாயமாக அதனை தரையிறக்கி உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பெலாரஸ் எதிரணியைச் சேர்ந்த இளம் டிஜிட்டல் ஊடகவியலாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
கிரேக்கத்தில் இருந்து லித்துவேனியா (Lithuania) நோக்கிப் பறந்து கொண்டி ருந்த அந்த விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக விமானிக்குத் தெரிவித்து அதனைத் திசை திருப்பிய பெலாரஸ் அதிகாரிகள் அதனைத் தமது நாட்டில் தரையிறக்கி உள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
பெலாரஸ் அதிபரது நேரடி உத்தரவில் அந்த போயிங் விமானம் வான்படையின் சோவியத் காலத்து ‘மிக் 29’ ரக போர் விமானம் ஒன்றினால் இடைமறிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதன் பாதுகாப்புடன் தலைநகர் மின்ஸ்கில் (Minsk) உள்ள விமான நிலையத்தில்இறக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த எதிரணி ஊடகவியலாளர் அங்கு தடுத்துவைக்கப்பட்டார் என்றுகூறப்படுகிறது.விமானம் சுமார் ஏழு மணிநேர தாமதத்தின் பின்னர் பயணிகளுடன் மீண்டும் லித்துவேனியாநோக்கிப் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஊடகவியலாளரது நிலைமை என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
எதேன்ஸில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட அந்த விமானத்தில் ஊடகவியலாளர் இருப்பதை அறிந்து கொண்டே பெலாரஸ் அதிகாரிகள் வேண்டும் என்றே விமானத்தில் குண்டுப் புரளியை கிளப்பித் தரையிறக்கி உள்ளனர் என்று குற்றச்சாட்டப்படுகிறது.
பெலாரஸ் நாட்டின் அதிபரைப் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக அங்கு போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்நாட்டின் எதிர்க்கட்சி சார்புச் செயற்பாட்டாளராகிய 26 வயதான ரோமன் புரோட்டசெவிச்(Roman Protasevich) என்ற இளம் டிஜிட்டல் பதிவரே (Blogger) மின்ஸ்க் விமான நிலையத்தில்தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.
பெலாரஸில் சுயாதீன செய்தி ஊடகங்கள் தடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எதிரணியால் இயக்கப்படுகின்ற”நெஸ்ரா” என்னும் ரெலிகிராம் (NEXTA, Telegram channel) செய்திச் சேவையின் நிறுவுனரான புரட்டசெவிச் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறித் தற்சமயம் அயல் நாடான லித்துவேனியா வில் இருந்து செயற்பட்டு வருகிறார்.
ஆட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால் இருந்து செயற்படுகின்றார் என்று குற்றம் சாட்டி அவரைக் கைது செய்வதற்கு அரசு பல தடவை முயன்றுள்ளது. தற்சமயம் அவரது விமானத்தை தந்திரமாகத் தரையிறக்கிஅவரைக் கைது செய்திருக்கிறது பெலாரஸ்.
சர்வதேச வான் போக்குவரத்துச் சட்டங்களை மீறி றயன் எயார் விமானத்தை வழிமறித்துப் பயணிகளுடன் தடுத்து வைத்திருந்தமைக்குப் பரவலாகக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ நாடுகளும் தலையிடவேண்டும் என்ற அவசர கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர்இது ஒர் “ஏற்றுக்கொள்ள முடியாத”செயல் என்ற கண்டித்திருக்கிறார். பெலாரஸின் இந்த நடவடிக்கை ஓர்”அரச பயங்கரவாதச் செயல்”என்றபோலந்துப் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார். பெலாரஸ் மீது எத்தகைய பதில் நடவடிக்கை எடுப்பது என்பதை ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இன்று விவாதிக்கவுள்ளன. ஏற்கனவே மேற்கு நாடுகளுடனான பெலாரஸின் உறவுகள் மோசமடைந்துள்ளன. அந்த நிலையில் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் உறவுகளை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கிறது.
என்ன நடக்கிறது பெலாரஸில்?
பெலாரஸ், லித்துவேனியா இரண்டும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த தனித்தனி நாடுகள் ஆகும். அதில் லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகும். ஆனால் பெலாரஸ் நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையாமல் ரஷ்யாவின் ஆதரவுடன் தனித்து ஆட்சி நடத்துகின்ற கிழக்கு ஐரோப்பிய நாடு ஆகும்.பெலாரஸ் ஆட்சியை எதிர்க்கின்ற பலரும் அயல் நாடான லித்துவேனியாவில் ஒளிந்திருந்து செயற்படுகின்றனர்.
1994 முதல் தொடர்ந்து பெலாரஸைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்து ஆட்சிநடத்திவருகின்றார் அதிபர் லுகாஷென்கோ.(Alexander Lukashenko). எதிர்க் கட்சிகளது குரலை அடக்கி ஒடுக்கி முறைகேடான தேர்தல்கள் மூலம் தனது அதிகாரத்தைத்தொடர்ந்து தக்கவைத்து வருபவர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். ஜரோப்பாவில் இன்னமும் எஞ்சியுள்ள கடைசி சர்வாதிகார ஆட்சி என்று பெலாரஸை மேற்கு நாடுகள் குறிப்பிடுகின்றன. ஜரோப்பாவில் மரணதண்டனை வழங்குவதை இன்னமும் செயல்படுத்தி வருகின்ற ஒரேயொரு நாடு பெலாரஸ் ஆகும்.
66 வயதான லுகாஷென்கோ தொடர்ந்து ஆறு தவணைக் காலம் பெலாரஸை ஆண்டு வருகிறார். கடந்த ஆண்டில் அங்கு கடைசியாக நடைபெற்ற தேர்தலிலும் அதிபர் லுகாஷென்கோவே வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப் பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான எதிரணிப் பெண் வேட்பாளரான ஸ்வெட்லானா டிஹானுஸ்காயா (Svetlana Tikhanouskaya) தலைமையில் நாடெங்கும் வெடித்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர் கைதுசெய்யப்பட்டனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சித் தலைவி ஸ்வெட்லானா தனது குடும்பத்துடன் லித்துவேனியாவில் தஞ்சமடைந்துள்ளார். அவரது கணவர் பெலாரஸ் சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்