பைசர் – பயோன்டெக் தடுப்பு மருந்துக்கு இழிவான வதந்தி பரப்பும்படி பிரபலங்கள் கோரப்பட்டார்கள்.
பிரான்ஸின் முக்கியத்துவர்களும், சமூக வலைத்தளப் பிரபலங்கள் சிலரும் செவ்வாயன்று மின்னஞ்சல் ஒன்றின் மூலம் பைசர் பயோன்டெக்க்கின் தடுப்பு மருந்தைப் பற்றி இழிவான கதைகளைப் பரப்பும்படியும் அதற்காகப் பெருந்தொகை சன்மானமாகத் தரப்படும் என்று ஆசைகாட்டவும் பட்டிருக்கிறார்கள். மருத்துவ சேவையிலிருக்கும் முக்கிய புள்ளிகள் சிலர் தமக்குக் கிடைத்திருக்கும் அந்த மின்னஞ்சல்களில் ஒரு பிரிட்டிஷ் விளம்பர நிறுவனத்தின் பின்னணி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
எழுத்தாளரும், யுடியூப் விஞ்ஞான நிகழ்ச்சிகள் நடத்துபவருமான லியோ கிரஸே என்பவர் தனக்கு பைசரின் தடுப்பு மருந்துகளைச் சாடும் வீடியோ ஒன்று அனுப்பப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் குறிப்பிட்ட முகம்தெரியாத அமைப்புடன் சேர்ந்து செயற்பட்டால் பெரும் தொகையைச் சன்மானமாகப் பெறலாம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் தொடர்பு நிறுவனம் குறிப்பிட்ட கட்டடத்தில் இருக்கவில்லை. தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே ரஷ்யாவில் வாழ்பவர்களாகத் தெரியவந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சாமி ஒலடித்தோ என்ற பிரெஞ்ச் நகைச்சுவை நடிகருக்கும் அதே போன்ற அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அனுப்பியவர் 80,000 பேர்களால் தொடரப்படும் ஒரு இன்ஸ்டகிராம் அடையாளம் உள்ளவரும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஒருவர் என்று குறிப்பிடப்படுபவராவார்.
பலராலும் இந்த அழைப்புப் பற்றித் தெரிந்துகொண்ட பிரெஞ்ச் லா மொண்டே ஊடகம் குறிப்பிட்ட [Fazze]பிரிட்டிஷ் நிறுவனம் பற்றிய விசாரணைகளில் ஈடுபட்டபோது அதற்கு பிரிட்டனில் அலுவலகங்கள் இல்லை என்று தெரியவந்தது. ஆனால் வெர்ஜின் தீவுகளில் வங்கிக்கணக்கு இருக்கலாம் என்று தெரியவருகிறது. குறிப்பிட்ட நிறுவனத்தின் நிர்வாகி எனப்படுபவரின் அடையாளங்கள் ஊடகம் தனது விசாரணைகளை ஆரம்பித்தவுடன் காணாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்