அமெரிக்கப் பாராளுமன்ற கீழ்ச்சபையில் பச்சைக்கொடி பெற்ற தீர்மானத்துக்கு செனட் சபையில் சிகப்பு விளக்கைக் காட்டினார் டிரம்ப்.
பதவிகளுக்கு வெளியே இருந்துகொண்டே மீண்டுமொருமுறை அமெரிக்காவின் ரிபப்ளிகன் கட்சியைத் தனது எண்ணத்துக்கு இயக்கி வென்றிருக்கிறார் டிரம்ப். ஜனவரியில் அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பற்றிய இரண்டு கட்சி ஆராய்வு நடத்துவதற்கு அமெரிக்க செனட்சபையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இரண்டு கட்சிகளிலுமிருந்தும் சம பங்கு அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு குழுவை நியமித்து அவர்கள் மூலம் பாராளுமன்ற வன்முறைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்துவதற்கான டெமொகிரடிக் கட்சியினர் கொண்டுவந்த பிரேரணை 54 – 35 என்ற இலக்கத்தில் தோல்வியடைந்தது. பதினொரு செனட்டர்கள் சபையில் பங்கெடுக்கவில்லை. ரிபப்ளிகன் கட்சியிலிருந்து 10 ஆதரவு வாக்குகள் கிடைக்கவேண்டும் என்ற நிலையில் ஆறு வாக்குகளே பிரேரணைக்கு ஆதரவாக அவர்கள் பக்கத்திலிருந்து கிடைத்ததால் அந்த விசாரணைக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அந்த வன்முறைகள் பற்றிய விசாரணை தனது கட்சிக்கும், தனக்கும் தாக்குதலையே ஏற்படுத்தும் என்பது டொனால்ட் டிரம்ப்பின் கருத்து. எனவே அவர் தனது ஆதரவாளர்களை அதற்கேற்றபடி இயக்கினார். செனட் சபையில் ரிபப்ளிகன் கட்சியினரின் தலைவராக இருக்கும் மிச் மக்டொனால்ட் “அப்படியான ஒரு விசாரணை அமெரிக்காவின் அரசியலை வேறு திசை நோக்கித் திருப்பிவிடும். வரவிருக்கும் தேர்தல்களில் டெமொகிரட்டிக் கட்சியினருக்கு ஆதரவாக இருக்கும்,” என்று கருதித் தன் பக்கத்தினரை அதற்கெதிராக வாக்களிக்கவைத்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்