சீனாவில் பிள்ளை பெற்றுக்கொள்ளுதல் 1960 களின் பின்னர் பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
கடந்த அறுபது வருடங்களில் காணமுடியாத அளவுக்குச் சீனர்கள் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதைக் குறைத்திருக்கிறார்கள். கடந்த வருடத்தில் 12 மில்லியன் குழந்தைகளே சீனாவில் பிறந்தார்கள். ஒப்பீட்டு ரீதியில் 1960 களில் நாட்டிலேற்பட்ட பஞ்ச, பட்டினிக் காலத்தின் பின்னர் இவ்வளவு குறைந்த அளவில் பிள்ளைகள் பிறந்தது 2020 தால் என்று குறிப்பிடப்படுகிறது.
பொருளாதாரக் காரணங்களே இப்படியான சமயத்தில் முக்கியமானவையாகக் குறிப்பிடப்படுகின்றன. போட்டியான தொழிலாளர் சந்தை நிலைமை, வீட்டு விலைகள் மிக அதிகமாகியிருக்கின்றன, குழந்தைக் காப்பகங்களுக்கான கட்டணம் மிக அதிகம், பாடசாலைக் கல்வி கத்திமுனைப் போட்டியாக இருக்கிறது போன்ற காரணங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
பல வழிகளிலும் முன்னேற்றமடைந்துவரும் சீனாவின் இளவயதினர் தாம் எதிர்பார்க்கும் துறையில் முன்னேறக்கூடிய சாத்தியக்கூறுகளைக் காண்கிறார்கள். எனவே தம்பதிகளாகினாலும் கூடப் பிள்ளை பெற்றுக்கொள்ளுதல், வளர்த்தல் போன்றவைக்காகத் தமது கவனத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்க அவர்களுக்கு விருப்பமில்லை.
நீண்டகாலமாக மக்களை ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி 2016 லிருந்து குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளுங்கள் என்று வேண்டுதல் செய்து வருகிறது. ஆனாலும், அது சீனர்களிடையே நடப்புக்கு வராமலிருக்கப் பல வாழ்க்கை நிலைமைகள் முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றன.
சாள்ஸ் ஜெ.போமன்