தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.
தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்” இறந்துபோனார்கள். தன்சானியாவின் ஜனாதிபதி ஜோன் மங்குபுலி இறந்ததும் அப்பதவிக்கு வந்தவர் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியான சமியா சுலுகு ஆகும்.
கடந்த மாதத்தில் தன்சானியா தனது போக்கை மாற்றிக்கொண்டு தனது நாட்டின் வெளிநாட்டுத் தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவைகள் தமது ஊழியர்களுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்துகளை இறக்குமதிசெய்துகொள்ள அனுமதியளித்தார். அத்துடன் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துத் திட்டத்தில் சேர்ந்துகொள்ளவும் விண்ணப்பித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தன்சானியாவின் சுயாட்சியுள்ள மாநிலமான சன்சிபார் சீனாவின் சினோவாக் தடுப்பு மருந்துகளைத் தனது குடிமக்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தது. கடந்த வாரம் அமெரிக்காவிடமிருந்து ஒரு மில்லியன் ஜோன்சன் தடுப்பு மருந்துகளைத் தன்சானியா அரசு பெற்றுக்கொண்டது.
அதையடுத்து, நாட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்து ஜனாதிபதி ஷமியா சுலுகு தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டதுடன், “முகக்கவசம் அணியுங்கள், ஆரோக்கியமாக இருந்து சுகாதாரத்தைப் பேணுங்கள், அடிக்கடி உங்கள் கைகளைக் கழுவிக்கொள்ளுங்கள், விலகியிருங்கள், தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்,” என்று தனது நாட்டவரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பதவிக்கு வந்த ஆரம்பத்தில் கொரோனாத் தொற்றுக்கள், தடுப்பு மருந்துகள் பற்றி அலட்சியமாகவே கருத்துத் தெரிவித்த புதிய ஜனாதிபதி தனது போக்கை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக, மேலுமொரு தடுப்பு மருந்து மறுப்பு நாடாக இருந்த புருண்டியும் தனது நாட்டில் தடுப்பு மருந்துகளைப் பாவிக்க ஒத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்