கொரோனாத்தொற்றுக்களைத் தாண்டியதைக் கொண்டாடப் புறப்பட்ட நியூயோர்க் அமெரிக்கர்களைத் தாக்கிய சூறாவளி.
அமெரிக்காவின் கிழக்குக்கரையோரத்தை நோக்கித் தாக்க ஆரம்பித்திருக்கிறது ஹென்றி என்ற சூறாவளி. நியூயோர்க் சென்றல் பார்க் அப்பொழுதுதான் கொரோனாத் தொற்றுக்களின் பின்னர் கொண்டாட்டங்களுடன் திறக்கப்பட்டிருந்தது. சூறாவளிக்குக் கட்டியம் கூற ஆரம்பித்திருந்த இடி மின்னலுடன் கூடிய கடும் காற்றும், மழையும் அங்கே கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களைத் தாக்கவே பாதுகாப்புக் கருதி உடனடியாக நிறுத்தப்பட்டது. பிரபலமான இசைக்குழுக்கள் பங்கெடுக்கும் அந்த இசை நிகழ்ச்சி, தடுப்பூசிகளிரண்டையும் போட்டுக்கொண்ட 60,000 பேர் காண ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத்தில் வாழ்பவர்களில் 40 மில்லியன் பேர் வெவ்வேறு அளவில் சூறாவளி ஹென்றி அவர்களைத் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். முக்கியமாக வடகிழக்குக் கரையோரங்களில் அது கடுமையாகத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பிராந்தியத்தில் இதுபோன்ற ஒரு கடுமையான இயற்கைத் தாக்குதல் 30 வருடங்களாக உண்டாக்கியிருக்கவில்லை என்று வானிலை அவதானிப்பு மையம் குறிப்பிடுகிறது.
மாசாசூசட்ஸ் மாநிலத்தின் பாகங்களை அதிக பலத்துடன் ஹென்றி தாக்கவிருக்கிறது. சனியன்று மாலையே அதன் உக்கிரத்தை அமெரிக்காவின் வடகிழக்குக் கரையோரத்தின் பல பாகங்களில் மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள். நியூயோர்க் ஐலண்ட் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நாடும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஜோ பைடன் வடகிழக்குப் பக்க மாநில ஆளுனர்களுடன் ஹென்றி சூறாவளியை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். பல பகுதிகளிலும் அவசரகால நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு, அரசின் உதவிகள் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கின்றன.
ஞாயிறன்று காலை ஹென்றி தனது முழுப்பலத்துடன் பல இடங்களில் தாக்கும் என்று தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்