வான் தள நெரிசலில் ஏழு பேர் பலி!
காபூல் அவலம் ஒரு வாரமாக நீடிப்பு!
மீட்பு விமானத்தில் பெண் பிரசவம், படை வீரர்கள் கையில் குழந்தைகள்!
சீருடையும் கவச அங்கிகளும் அணிந்த ஒர் அமெரிக்கப் படைவீரர் கதிரையில் அமர்ந்திருக்கிறார்.துப்பாக்கி அவர் கையில் இல்லை.மாறாக ஒரு கைக் குழந்தையைத் தங்கியுள்ளார்.அதனால் அவர் முகத்தில் சிறு புன்னகை.
பிறந்து சில தினங்களேயான பச்சிளங் குழந்தைகளைக் கைகளில் சுமந்தவாறு வெளிநாட்டு இராணுவ வீரர்கள் தோன்றும் இது போன்ற படங்கள் பல வெளியாகி உள்ளன.
கைக் குழந்தைகளுடன் சனக் கூட்டத்தில் நெரிபடுகின்ற பெண்கள் காபூல் விமான நிலையத்தின் சுற்று மதில் முட்கம்பி வேலிகளுக்கு மேலாகக் குழந்தைகளைஉள்ளே வீசுகின்ற காட்சிகளைக் கண்டதாக பிரிட்டிஷ் படை வீரர்கள் கூறியிருக்கின்றனர்.
குழந்தைகளைப் பாதுகாக்கவும், மருத்துவ உதவிக்காகவும் அவ்வாறு சிசுக்கள்உள்ளே வீசப்படுவதாகக் கூறப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு விமானங்களில் இடம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையிலும் இளம் தாய்மார்அவ்வாறு குழந்தைகளைப் படையினர் பொறுப்பில் விடுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. காபூல் விமான நிலையத்தின் உள்ளே நோர்வே மருத்துவர்களால் நடத்தப்படுகின்ற சிகிச்சை நிலையம் ஒன்றில் பல குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சன நெரிசல்களில் பெற்றோரைத் தொலைத்த சிறுவர்கள் பலர் அநாதைகளாக நிற்கின்றனர் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
விமான நிலையத்துக்குப் படையெடுத்து வரவேண்டாம் என்று அமெரிக்க இராணுவம் காபூல் வாசிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆயினும் அங்கு மக்கள் வெள்ளம் தணியவில்லை. விமான நிலைய வாயிலில் ஏற்பட்ட நெரிசல்களில் சிக்கி பெண்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலை பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கிறது. மேலும் பல ஆப்கானியர்கள் சூட்டுச் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் குழந்தை பிரசவம்
காபூலில் இருந்து வெளியேறிகளைமீட்டுவந்த இராணுவ விமானத்தில் தாய் ஒருவர் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். தாயும் சிசுவும் பாதுகாப்பாக ஜேர்மனியின் ராம்ஸ்டின் வான் தளத்தில்(Ramstein Air Base) இறக்கப்பட்டனர். அமெரிக்க இராணுவத்தின் மருத்துவப் பிரிவினர் அந்தப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர்.பிரசவத்தை இலகுவாக்கித் தாயின் உயிரைப் பாதுகாப்பதற்காக விமானி பறப்பு உயரத்தைக் குறைத்து விமானத்தை நீண்ட நேரம் தாழப் பறக்கச் செய்தார் என்று விமானப்படையின் ருவீற்றர் பதிவு தெரிவிக்கிறது.
குமாரதாஸன். பாரிஸ் –