ஒலிம்பிக்ஸ் அமைப்பின் உயர்மட்டத்தில் ஜாம்பவானாக இருந்த குவெய்த் அரச குடும்பத்தினர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார்.
ஆசிய ஒலிம்பிக்ஸ் அமைப்பின் தலைவராக இருந்த ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா வெள்ளியன்று சுவிஸ் நீதிமன்றத்தில் குற்றவாளிகாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அதனால் அவர் தனது ஒலிம்பிக்ஸ் அமைப்பின் பதவியிலிருந்து கீழிறங்கவேண்டியதாதிற்று.
குவெய்த்தின் முன்னாள் பிரதமராக இருந்த ஷேய்க் நஸ்ஸார் அல்-முஹம்மது அல்-சபா பாராளுமன்றச் சபாநாயகரான ஜஸ்ஸம் அல் கராபியுடன் சேர்ந்து நாட்டின் மன்னராக இருந்து கடந்த வருடம் மறைந்த ஷேய்க் சபா அல்-ஜாபர் அல்-சபாவைப் பதவியிலிருந்து கவிழ்க்கத் திட்டமிட்டதாக ஒலி, ஒளி நாடாக்கள் 2013 இல் வெளியாகின. குவெய்த்தை மட்டுமன்றி மத்திய கிழக்கு நாடுகளையும் அதிரவைத்த அந்த விபரங்கள் பற்றி உடனே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விசாரித்ததில் அந்த நாடாவின் ஒலிப்பதிவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தவை தெரியவந்தது. குவெய்த் அரசு அது ஒரு பொய்யான தகவல் என்று விசாரணையின் பின்பு 2015 இல் தெரிவித்தது.
அந்த ஒலி, ஒலி நாடாக்களின் பின்னாலிருந்தவர்கள் யாரென்று விசாரித்ததில் அது ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா என்று தெரியவந்ததது. குவெய்த் அரச குடும்பத்தினரிடையே அவ்விபரங்கள் பிளவுகளை ஏற்படுத்தின. அதுவரை காலமும், சர்வதேச விளையாட்டுகளின் உயர்மட்டத்தில் பிரபலமாக இருந்த ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா அதனால் தான் அதுவரை வகித்துவந்த பல உயர் மட்டப் பதவிகளிலிருந்து விலக வேண்டியதாயிற்று.
ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா அந்தப் பொய்யான அரசு கவிழ்ப்பு நாடாவை வெளியிடக் காரணம் சர்வதேச விளையாட்டுத் துறையின் உயர்மட்டத்தில் தனது எதிரிகள் சிலரை வீழ்த்தவே என்று குறிப்பிடப்பட்டது. உண்மை தெரியவந்தபின் ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா அதனால் பாதிக்கப்பட்டவர்களிடமும், குடும்பத்தினரிடமும் தனது செயலுக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச விளையாட்டுத்துறையின் உயர்மட்டத்தினரை ஏமாற்ற முயன்ற அவ்வழக்கு சுவிஸ் நாட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபா தவிர குவெய்த் அரச குடும்ப அங்கத்தினர் மேலும் சிலரும் அவ்வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். மற்றவர்களுடையே பெயர்கள், விபரங்கள் வெளியிடப்படவில்லை.
சுவிஸ் நீதிமன்றம் ஷேய்க் அகமத் அல்-பகத் அல்-சபாவுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது. தண்டனை விதிக்கப்பட்ட அவர் தொடர்ந்தும் தான் நிரபராதி என்றும் தனது பெயரின் களங்கம் நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்