“இந்தோனேசியா 2030 இல் காடுகளை அழிப்பதை நிறுத்துவது நடக்காத காரியம்,” என்கிறார் நாட்டில் சூழல் அமைச்சர்.
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காலநிலை மாநாடு இன்னும் முடிவடையவில்லை. ஆனால், மாநாடு ஆரம்பித்த நாளில் ஒப்பிடப்பட்ட பட்டயத்தின்படி 2030 இல் நாட்டின் காடு அழிப்பை நிறுத்துவது நடக்காத காரியம் என்கிறார் இந்தோனேசியாவின் சூழல் அமைச்சர் சிதி நிருபயா பாக்கர்.
“இந்தோனேசியா தனது காடுகளை அழிப்பதை நிறுத்தி, அழிக்கப்பட்ட காடுகளைச் சீர்திருத்தவேண்டுமென்று நிர்ப்பந்திப்பது நியாயமல்ல,” என்கிறார் அமைச்சர் பாக்கர்.
உலகின் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தமது காடுகளை அழிப்பதை 2030 வரையில் நிறுத்திவிடுவதாக உறுதிகொடுத்தன.
இந்தோனேசியாவின் சார்பில் குறிப்பிட்ட பட்டயத்தில் ஜனாதிபதி யுகோ வூடோ கையெழுத்திட்டிருந்தார். நாட்டின் சூழல் அமைச்சரோ, “நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, நாட்டை முன்னேற்றும் நடவடிக்கைகள் பலவற்றை ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். கரியமிலவாயுக் குறைப்பு, கால நிலைமாற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுதல் போன்ற எவைக்காகவும் எங்கள் அபிவிருத்தி நடவடிக்கைகளை நிறுத்த முடியாது,” என்கிறார் பாக்கர்.
இந்தோனேசியா உலகின் மூன்றிலொரு பங்கு மழைக்காடுகளைக் கொண்டிருக்கிறது. அவை நாட்டின் தேசிய வளங்கள் என்றும் அவைகளை இந்தோனேசியா பாவிப்பதை எவரும் தடுக்கக்கூடாது என்பதை சூழல் அமைச்சரும், உதவி வெளிவிவகார அமைச்சரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
2030 இல் காடுகளை அழிக்கும் நாடுகள் அதை நிறுத்துவதாக உறுதிகொடுத்திருந்ததை இயற்கை ஆர்வலர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அதே சமயம் இன்னொரு பகுதியினர் இதுபோன்ற உறுதிமொழிகள் முன்பும் கொடுக்கப்பட்டன, ஆனால், நிறைவேற்றப்படவில்லை, இனியும், அவை உதாசீனப்படுத்தப்படும் என்று இன்னொரு சாரார் விமர்சித்து வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்