ஐ.நா-வின் 16 ஊழியர்களும், குடும்பங்களும் எத்தியோப்பியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
எத்தியோப்பியக் குடிமக்களான 16 ஐ.நா ஊழியர்கள் சமீப நாட்களில் அவர்களுடைய வீடுகளில் வைத்து அரசால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினரும் கூடவே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி ஐ.நா எத்தியோப்பிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரியிருக்கிறது.
எத்தியோப்பியாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டார்களா என்றோ, அப்படியானால் அதன் காரணம் என்ன என்பது பற்றியோ எதையும் விபரிக்க மறுத்துவருகிறது.
சமீப நாட்களில் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியிருக்கிறது எத்தியோப்பியா. அதையடுத்து திகிராய் மாநில விடுதலை இயக்கத்தின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அடிஸ் அபாபாவில் திகிராய் இனத்தவர்கள் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக நாட்டின் மனித உரிமைகள் அமைப்புப் பிரதிநிதி குறிப்பிடுவதை மறுக்கிறார் நகர பொலீஸ் அதிபரின் காரியதரிசி.
சாள்ஸ் ஜெ. போமன்