மீண்டும், ஒர்பானுக்கு வாக்களித்த ஹங்கேரியர்களுக்குப் பரிசாக ஐரோப்பிய ஒன்றிய நிதிகள் முடக்கப்படவிருக்கின்றன.
ஹங்கேரியில் ஜனநாயகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து, லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டுவரும் அரசு என்று விக்டர் ஒர்பானின் அரசு நீண்ட காலமாகவே குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பலவற்றை மீறிய ஒர்பானுக்குப் பல எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டும் அவர் அதை உதாசீனப்படுத்தி வந்தார். அதைத் தண்டிக்குமுகமாக ஐரோப்பிய ஒன்றியம் ஹங்கேரிக்கான ஒன்றிய உதவி நிதிகளை முடக்கும் நடவடிக்கையை எடுக்கப்போவதாகச் செவ்வாயன்று அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைக் கோட்பாடுகள், ஜனநாயகச் செயல்பாட்டுக் கோட்பாடுகளுக்கு எதிரான நடக்கும் நாடுகளுக்கான உதவி நிதிகளை வெட்டுவதற்கு ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டம் இடமளிக்கிறது. ஆனாலும், அப்படியான தண்டனை இதுவரை எந்த ஒரு ஒன்றிய அங்கத்துவம் மீதும் எடுக்கப்படவில்லை.
நாட்டின் நீதியமைச்சை ஆளும் கட்சி புதிய அதிகாரங்களை நியமித்துத் தனது கைவசப்படுத்துவதை நிறுத்தும்படி ஹங்கேரியிடம் கோரியது ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ஒர்பான் அரசுக்கும் இடையேயான கடைசி இழுபறியாகும். ஏற்கனவே நாட்டின் ஊடகங்கள் உட்படச் சகல அதிகாரங்களையும் ஆளும் கட்சியால் கட்டுப்படுத்துமுகமான சட்டங்களைக் கொண்டுவந்திருக்கும் ஹங்கேரி அரசுக்கு ஒவ்வாத தீர்ப்புக்களைக் கொடுக்கும் நீதிபதிகளையும் வெளியேற்றி வருகிறது.
ஹங்கேரிய அரசுக்கான உதவி நிதிகள் நிற்பாட்டப்படுவதான அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றியத்தின் தலைமையிடமிருந்து அனுப்பப்படும் என்று ஒன்றியப் பாராளுமன்றத்தில் அதன் தலைவர் உர்சுலா வொன் டர் லெயொனால் அறிவிக்கப்பட்டது. அந்த முடிவுக்குச் சபையில் பெரும் ஆரவாரம் செய்து வரவேற்புக் கொடுத்தனர் அங்கத்தவர்கள்.
ஞாயிறன்று ஹங்கேரியில் நடந்த பொதுத் தேர்தலில் விக்டர் ஒர்பான் நாலாவது தடவையாக நாட்டை ஆள மிகப் பெரும் பெரும்பான்மையுடன் வென்றிருக்கிறார். தேசியவாத, வலதுசாரிப் பழமைவாதக் கட்சியான அவரது கட்சி பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது.
விக்டர் ஒர்பானின் உதவியாளர், “ஒன்றியம் தனக்குப் பிடிக்காத அரசியல் தலைமையைச் செய்த ஹங்கேரிய மக்களைத் தண்டிக்கிறது என்றும் அது ஒரு தவறான முடிவு” என்றும் குறிப்பிட்டார்.
உக்ரேனுக்கு மீதான ரஷ்யப் போரை “எங்களுக்குச் சம்பந்தமில்லாதது,” என்று குறிப்பிடும் ஒர்பான் ரஷ்ய ஜனாதிபதியுடன் நீண்ட காலமாகக் குலவி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் புத்தினின் கையாள் என்று உக்ரேன் ஜனாதிபதி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தனது வெற்றியைக் கொண்டாடிய ஒர்பான், உக்ரேன் ஜனாதிபதியையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐரோப்பிய ஒன்றியங்களையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்