பெண்களின் எதிர்ப்பால் நியூயோர்க் ஆளுனர் பதவியிறங்க, அவ்விடத்தில் முதல் தடவையாக ஒரு பெண்.
நியூயோர்க் நகரின் ஆளுனராக முதல் தடவை ஒரு பெண் பதவியேற்கவிருக்கிறார். அந்த நகரில் 2011 முதல் ஆளுனராக இருந்த ஆண்டிரூ கூமோ பல பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுத்ததாகப் பல வருடங்களாக வெளிவந்த விபரங்களின் விளைவுகளால் பதவி விலகினார். அவரது இரண்டாவது இடத்திலிருந்த கத்தி ஹோக்குல் [Kathy Hochul] இன்னும் இரண்டு வாரங்களில் ஆளுனராகப் பதவியேற்கவிருக்கிறார்.
https://vetrinadai.com/news/women-harrasment-report-coumo/
கூமோ பதவி விலகவேண்டுமென்று சகல மட்டங்களிலுமிருந்து குரல்கள் ஒலித்தன. அவர் தொடர்ந்தும் பதவியிலிருக்கும் பட்சத்தில் நியூயோர்க் நகரின் அதிகார மட்டச் செயற்பாடுகள் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலையில் அவர் பதவியிலிருந்து விலகினார்.
“அவர் பதவியிலிருந்து விலகியதுதான் சரியான முடிவு, நியூயோர்க் மக்களுக்கு நல்லது,” என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கும் ஹோக்குல் நியூயோர்க்குக்கு வெளியேயிருக்கும் ஹம்பர்க் நகரசபையின் உறுப்பினராக 14 வருடங்கள் இருந்திருக்கிறார்.
பதவியிறங்கிய கூமோவின் பிரபலத்தின் பகுதியளவு கூட இல்லாதவர் ஹோக்குல். அவர் இரண்டாவது ஆளுனர் என்ற இடத்தில் 2014 முதல் இருந்தாலும் கூட எந்த ஒரு தடவையும் கூமோவின் உத்தியோகபூர்வமான பத்திரிகையாளர் சந்திப்புக்களில் பங்குபற்றியதில்லை. கூமோவுடன் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமலிருந்தமை ஹோக்குலின் பலவீனம் என்று ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஆனால், நீண்டகாலமாகத் தனது பாலியல் துன்புறுத்தல்களுக்காக விமர்சிக்கப்பட்டு அவமானத்துடன் பதவியிறங்கிய கூமோவிடமிருந்து விலகியிருந்ததே ஹோக்குலின் பிரத்தியேக பலம் என்கிறார்கள் இன்னொரு சாரார்.
சாள்ஸ் ஜெ. போமன்