தென்னாபிரிக்காவின் டர்பன் பிராந்தியத்தில் வெள்ளத்தால் 300 க்கும் அதிகமான உயிர்கள் பலி.
விஞ்ஞானிகள், காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தது போலவே ஆபிரிக்காவின் தென்கிழக்குப் பகுதிகள் கால நிலைமாற்றத்தின் மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகின்றன. தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணமும் அதன் முக்கிய துறைமுகமான டர்பனும் கடும் மழையாலும், வெள்ளத்தாலும் தாக்கப்பட்டு வருகின்றன. அதன் விளைவுகளால் இதுவரை 300 க்கும் அதிகமானவர்கள் இறந்திருப்பதாகவும் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் தென்னாபிரிக்காவின் மீட்புப் படையினர் குறிப்பிடுகிறார்கள்.
குவாசுலு நதால் தென்னாபிரிக்காவின் இரண்டாவது அதிக மக்கள் தொகையுள்ள மாகாணமாகும். அங்கு சில பகுதிகளில் கடந்த நாட்களில் தினசரி 160 மி.மீற்றருக்கும் அதிக மழை பெய்து வருகிறது. அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் வீதிகள், பாலங்கள் சேதமடைந்ததுடன் அப்பகுதியில் வாழும் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்களின் குடிசைகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அதன் விளைவால் மக்கள் அங்கிருந்து கைக்ககப்பட்டவைகளுடன் தப்பியோடிப் பாதுகாப்பான இடத்தை நாடி வருகிறார்கள்.
உதவுவதற்காக மீட்புப்படைகள் தகுந்த நேரத்தில் வர முடியவில்லை. காரணம், மீட்புப்படையின் விமான உதவிப்படையின் மையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. டர்பன் துறைமுகத்துக்குள் வெள்ளம் புகுந்துவிட்டிருப்பதால் அங்கிருக்கும் கொள்கலன்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.
துறைமுகத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட சேதங்களைப் பயன்படுத்திப் பலர் அதற்குள் புகுந்து கொள்ளையடித்து வருகிறார்கள் என்கிறார்கள் பொலீசார். வெள்ளத்தினால் உடைந்த கொள்கலன்களுக்குள் இருக்கும் பொருட்களை எடுத்துச் செல்ல கொள்ளையடிக்கும் குழுக்கள் முயற்சி செய்து வருகின்றன. தமது நகருக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைக் குற்றவாளிகள் தமது செயல்களுக்காகப் பயன்படுத்த விடமாட்டோம் என்று நகரின் பொலீஸ் அதிபர் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
வெள்ளத்தால் பாதிக்க்கப்பட்ட இடங்களுக்குத் தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
“இவை காலநிலை மாற்றத்தின் விளைவினாலேயே உண்டாகியிருக்கின்றன. உங்கள் நிலைமை வேதனையளிக்கின்றது. எங்களாலான உதவிகளை நாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறோம். காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை நாம் மேலும் பின்போட முடியாது என்பதையே இந்த அழிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. நாம் உடனடியாக இப்படியான அழிவுகள் ஏற்படாமலிருக்கும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,” என்று அழிவுகளைப் பார்வையிட்ட அவர் குறிப்பிட்டார்.
சாள்ஸ் ஜெ. போமன்