44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை வாங்குகிறார் எலொன் மஸ்க்.
உலகில் மிகப்பெரும் பணக்காரரான எலொன் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை முழுவதுமாக வாங்கிக்கொள்ளப்போவது முடிவாகியது. 43 பில்லியன் டொலர் விலை தருவதாக அவர் ஒரு வாரத்துக்கு முன்னர் கொடுத்த பரிந்துரையை மறுத்த நிறுவனத்தின் நிர்வாகக்குழு அதை மஸ்க் வாங்குவதையும் ஆரம்பத்தில் விரும்பவில்லை. ஆயினும், அதுபற்றிய பேச்சுவார்த்தைகளின் பின்னர் 44 பில்லியன் டொலர்களுக்கு அவருக்கு விற்பது தீர்மானிக்கப்படது.
தான் அந்தச் சமூகவலைத்தள நிறுவனத்தை வாங்கிக்கொள்ள விரும்புவதற்கான காரணம் கருத்துச் சுதந்திரத்தின் வரையறைகளை விஸ்தரிப்பதே என்று மஸ்க் கூறியிருக்கிறார். அதன் விளைவாக டுவிட்டரில் நிறவெறி, இனவெறி, மதவெளி, தனிமனிதத் தாக்குதல்கள் அதிகமாகுமா இல்லையா என்பது அந்தச் சமூகவலைத்தளப் பாவனையாளர்கள், அரசியல்வாதிகளிடையே வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
தான் இஷ்டப்பட்டதையெல்லாம் சொல்லும் டொனால்ட் டிரம்ப் மீண்டும் டுவிட்டரில் அனுமதிக்கப்படலாம் என்ற கருத்தும் பரவலாக இருந்தது. ஆனால், தனக்கு டுவிட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லையென்று டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனக்கென்று டுருத் என்ற பெயரில் ஒரு சமூகவலைத்தளத்தை நிறுவியிருக்கிறார். ஒழுங்காக இதுவரை இயங்குவதில் பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் டுருத் தளத்தில் டிரம்ப் இதுவரை ஒரேயொரு பதிவையே பிரசுரித்திருக்கிறார்.
எலொன் மஸ்க்கைப் பொறுத்தவரை டுவிட்டர் நிறுவனத்தைச் சொந்தமாக்கிக் கொள்வதன் மூலம் அவரது சொத்தின் பெறுமதி அதிகரிக்கப்போவதில்லை. ஆனால், 83 மில்லியன் பேரை அதில் தனது சந்தாதாரராகக் கொண்டிருக்கும் பாவனையாளரான அவரது பிடி மேலும் இறுகலாம்.
மஸ்க் டுவிட்டரை வாங்கி அதன் ஒரு பகுதி பங்குகளை பங்குச்சந்தையில் விற்பாரா என்பதும் ஒரு கேள்வி. அதுபற்றி டுவிட்டரின் பங்குகளை இப்போது வைத்திருப்பவர்களே தீர்மானிக்கலாம் என்கிறார் அவர். அவரது கையிலேயே அது இருக்குமானால் அந்த நிறுவனத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அவர் இரகசியமாகவே வைத்திருக்கலாம்.
அமெஸாம் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெஸோஸ் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தை வாங்கியிருக்கிறார். மறைந்த ஸ்டீவ் ஜொப்பின் மனைவி லௌரன் பவல் அட்லாண்டிக் என்ற ஊடக நிறுவனத்தை வாங்கியிருகிறார். அது போன்று ஊடக\சமூகவலைத்தள நிறுவன உரிமையாளராக இருப்பதை ஒரு பிரத்தியேக கௌரவமாக மஸ்க் கருதக்கூடும் என்கிறார்கள் ஒரு சாரார்.
தனது டுவிட்டர் கணக்கின் மூலம் தனக்கு அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதைப் பதிந்து வைப்பவர் மஸ்க். பல தடவைகள் அவரது கருத்துக்கள் எதிரலைகளை வெவ்வேறு திசைகளில் உருவாக்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்