தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஸூமா தான் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வர மறுக்கிறார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமாவின் பதவிக்காலத்தில் அவர் மீது அடுக்கடுக்காக லஞ்ச ஊழல், நாட்டின் வளங்களைச் சுரண்டுதல் மற்றும் பதவியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்றவைகளில் திட்டமிட்டு ஈடுபட்டு வந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார். அதற்காக நாளை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுப் போக மாட்டேன் என்கிறார்.

78 வயதான ஜாக்கோப் ஸூமா 2018 இல் குப்தா சகோதர்களுக்ளுடன் இணைந்து செய்த ஊழல்கள் வெளிவந்ததால் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்டவர். லஞ்சம் வாங்கிக்கொண்டு இந்தியாவைச் சேர்ந்த குப்தா சகோதர்களுக்கு தென்னாபிரிக்காவின் பல வளங்களைச் சுரண்ட அனுமதித்ததுமன்றி அவர்களின் அனுமதியுடனேயே அமைச்சர்களையும் தெரிவுசெய்தார் ஸூமா என்ற உண்மை வெளிவந்தது.  தொடர்ந்த விசாரணைகளில் தென்னாபிரிக்க அரசத் திணைக்களங்கள், இரகசியப் பொலீஸ் அத்தனையுமே குப்தாக்களின் கைகளிலிருந்தது வெளியாகியது. “State capture” என்று தென்னாபிரிக்காவில் அந்த நிலைமைக்குப் பெயர் பிரபலமானது.

தனது தில்லுமுல்லுகள் வெளியாக ஆரம்பித்ததும் அவைகளை மறைக்க ஸூமா ஒரு விசாரணைக் குழுவை உண்டாக்கினார். நாட்டின் அதிகார இயந்திரங்களனைத்துமே குப்தாக்களின் கையிலிருந்ததால் அக்குழுவையும் தனது பொய்களால் மறைக்கவே ஸூமா திட்டமிட்டிருந்தாலும் அச்சமயத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொதிப்பால் பதவியிலிருந்து விலகவேண்டியதாயிற்று. 

ஸொண்டோ கொமிஷன் என்றழைக்கப்படும் அந்த விசாரணைக் குழு புதிய அரசின் காலத்தில் நாட்டின் லஞ்ச ஊழல்களை வெளிப்படுத்தி நிலைமையைச் சீர் செய்யும் அமைப்பாக மக்களால் கவனிக்கப்படுகிறது. அவர்களுடைய விசாரணையில் ஜூலை 2019 இல் ஒரு முறை மட்டுமே ஸூமா பங்குபற்றினார். அவ்விசாரணையின் இடைவேளையில் அவர் அனுமதியின்றி நீதிமன்றத்திலிருந்து வெளியேறிவிட்டார். அவரை மீண்டும் சமூகமளிக்கும்படி கேட்டிருப்பதையே அவர் இப்போது மறுத்து “முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்,” என்று சவால்விட்டிருக்கிறார்.

ஸொண்டோ கொமிஷனின் விசாரணையில் மேலும் 280 பேர் பங்குபற்றியிருக்கிறார்கள். அவர்களின் மூலம் நாட்டின் சுரங்க நிறுவனங்கள், திணைக்களங்கள் முதல் இரகசியப் பொலீஸ் வரை எப்படி ஸூமா – குப்தா சகோதரர்களால் இயக்கப்பட்டு வந்தது என்பது படிப்படியாக வெளியாகியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *