பாலஸ்தீன அதிபருக்குப் பதிலடியாக காஸாவை ஆளும் ஹமாஸும் ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளைக் கொண்டு வந்து இறக்கியது.

பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியான காஸா பிராந்தியத்தில் கொவிட் 19 தடுப்பூசிகள் கொடுக்கும் வைபவம் மருத்துவ சேவையாளர்களுக்கு அதைக் கொடுப்பதுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தவிர நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் முதல் கட்டத்தில் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

தனது நாட்டின் மூன்றிலொரு பகுதி மக்களுக்கு ஏற்கனவே தடுப்பூசியைக் கொடுத்த இஸ்ராயேல் பாலஸ்தீனப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு அதைக் கொடுப்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாலஸ்தீன அதிகாரத்தின் பொறுப்பாகும் என்று சொல்லிவிட்டது. பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி என்றாலும், எகிப்தாலும், இஸ்ராயேலாலும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

1.2 மில்லியன் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழும் காஸாவுக்காக 2,000 ஸ்புட்நிக் V தடுப்பூசிகளை மட்டும் இஸ்ராயேல் கொடுத்தது. பாலஸ்தீனத் தலைவரான அப்பாஸ் மேலும் ஸ்புட்நிக் V 10,000 தடுப்பு மருந்துகளை ஒழுங்குசெய்தார். எந்த எல்லையூடாக அவைகளைக் கொண்டுவருவது என்ற இழுபறிகள் ஏற்பட்டு ஒரு வழியாக அவை வந்து சேர்ந்தன.  

அதற்கு அடுத்த கட்டமாக தனது எதிரியான பாலஸ்தீன அதிகாரத்துக்கு மூக்குடைப்பது போன்று காஸாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு 20,000 ஸ்புட்நிக் V தடுப்பு மருந்துகளை காஸாவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. இவை எமிரேட்ஸால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டவையாகும்.

நீண்ட காலமாகத் தங்களுக்குள் மோதிக்கொண்டிருக்கும் அப்பாஸும், ஹமாஸ் இயக்கத்தினரும் தாம் தாம் ஆட்சிக்கு வந்தபின்னர் முதல் தடவையாக சமீபத்தில் தான் கைகுலுக்கிக்கொண்டு வரவிருக்கும் மே மாதத்தில் பொதுத் தேர்தல்களை ஒழுங்குசெய்திருக்கிறார்கள். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *