பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெல்லமுடியாத இம்ரான் கான் ஆட்சிமன்றத்தைக் கலைக்க வேண்டினார்.
ஞாயின்றன்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நடைபெற இருந்த அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு வரவிடாமல் அரசியலில் தனது காயை நகர்த்தியிருக்கிறார் பிரதமர் இம்ரான் கான். அவர் காலையில் நாட்டுமக்களுக்கு அளித்த உரையில் தான் ஜனாதிபதியிடம் பாகிஸ்தானின் ஆட்சிமன்றத்தைக் கலைத்துவிடும்படி வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தனது அரசாங்கத்துக்கு மிண்டு கொடுத்து வந்த கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தரமாட்டா என்பதைப் புரிந்துகொண்டிருந்தார் இம்ரான் கான். அதனால் அவரது அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வீழ்த்தத் தேவையான அளவு பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைத் திரட்ட முடியாதென்ற நிலையில் அவர் அந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு வராமலிக்குப் பல முயற்சிகளும் செய்து தோற்றுப் போனார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் வாக்காளர்களுக்கு ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துத் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டப்படி பிரதமர் பாராளுமன்றத்தைக் கலைக்கும்படி ஜனாதிபதியிடம் வேண்டிக்கொள்ளலாம். அந்த நகர்வை அவர் எடுத்ததால் பாராளுமன்றத்தின் சபாநாயகர் இன்று நடக்கவிருந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்காது என்று அறிவித்தார்.
இம்ரான் கானின் நகர்வும், பாராளுமன்றச் சபாநாயகரின் முடிவும் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளிலொன்று உச்ச நீதிமன்றத்துக்குப் போகவிருப்பதாகத் தெரிவித்தது. மேலுமொரு எதிர்க்கட்சியினர் தாம் பாராளுமன்றத்தை விட்டு வெளியே போகாமல் போராடவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
வெளிநாட்டுச் சக்திகள் – முக்கியமாக அமெரிக்கா – தனது அரசை வீழ்த்துவதற்காகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டி இம்ரான் கான் சமீப நாட்களில் மக்களைப் புரட்சி செய்யும்படி உசுப்பி வருகிறார். எதிர்க்கட்சிகளும் தமது ஆதரவாளர்களைப் போராட்டத்துக்குத் தயார் செய்திருக்கின்றன. இதனால் பாகிஸ்தானில் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது.
பாராளுமன்றத்தைச் சுற்றிய வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமாபாத் நகரில் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்