தெற்குப் பிராந்தியத்தில் காட்டுத்தீக்கள், துருக்கியின் வடக்கிலோ மழையும் பெருவெள்ளமும்.
துருக்கியின் வடக்குப் பகுதியில் கருங்கடலையொட்டியிருக்கும் நகரங்களில் பெய்துவரும் பெருமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அங்கே சுமார் 57 பேர் இறந்திருப்பதாகவும் ஒரு டசினுக்கும் அதிகமானோர் காணாமல் போயிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
நாட்டின் தெற்குப் பிராந்தியத்தில் கடும் வரட்சியாலும், அதிக வெப்பநிலையாலும் உயிர்ச்சேதங்களை உண்டாக்கி, கிராமங்கள், காடுகளை இரண்டு வாரங்களாக அழித்துவரும் காட்டுத்தீயை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக துருக்கிய அரசு அறிவித்திருந்தது. அதே சமயம் பார்ட்டின், கஸ்தமொனு, சினொப் ஆகிய கருங்கடலையடுத்துள்ள நகரங்களில் சில நாட்களாக பெய்துவந்த கடும் மழையே வெள்ளப்பெருக்குகளை உண்டாக்கியிருக்கிறது.
சனியன்று மாலை இதுபற்றிப் பேசிய உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு சமூகவலைத்தளங்களில் வெள்ளம் பற்றிக் குறிப்பிட்டுவரும் பலரின் கூற்றுக்கள், விபரங்கள் பொய்யென்று சாடினார். நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லையென்று பலர் எழுதிவருவது புரட்டு என்றும் சுமார் 77 பேரைக் காணவில்லையென்றும் அதன் அர்த்தம் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதல்லவென்றும் குறிப்பிட்டார். இறந்த 15 பேர் அடையாளங் காணப்படாதவர்களென்றும் குறிப்பிட்டார்.
சுமார் 6,000 மீட்புப் பணியார்கள், 20 மீட்புப்பணி நாய்கள், 20 ஹெலிகொப்டர்களின் உதவியுடன் அப்பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு உதவுவதில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது.
சினொப் நகரில் ஒரு கிராமம் முழுவதுமாக வெள்ளத்தில் அடிபட்டுப் போயிருக்கிறது. நதியொன்றின் கரையையொட்டிக் கட்டப்பட்டிருந்த ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டடமொன்றும் பல வீடுகளும் நீருக்குள் மூழ்கின. அத்துடன் பல பாலங்களும் வீதிகளும் அந்த நகரில் உடைந்து சிதறலாகக் கிடக்கின்றன என்று சாட்சிகள் தெரிவிக்கின்றன.
முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் என்கீன் அட்லாய் பேசியபோது அரசு உண்மையான விபரங்களை வெளியிடவேண்டும் என்று குறிப்பிட்டார். சுமார் 300 பேர்களை காணவில்லையென்று தனக்கு விபரங்கள் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
துருக்கியில் கட்டப்பட்டிருக்கும் பல கட்டடங்கள் பாலங்கள் இயற்கையின் சக்தியைக் கணக்கெடுக்காமல் கட்டப்பட்டிருப்பதாகவும், பல கட்டடங்கள் தவறான முறைகளில், ஏமாற்றுப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதாகவும் துருக்கியின் சுற்றுப்புற சூழல் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் பக்க விளைவுகள் மேலும் பல இயற்கை அழிவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்