வெனிசுவேலாவுக்கு உதவிக்கரம் நீட்டும் ஈரான்
அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளான இரண்டு நாடுகளான ஈரானும், வெனிசுவேலாவும் “எதிரிக்கு எதிரி நண்பன்,” பாணியில் ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் தங்கள் பொருளாதார நிலைமையைச் சீர்செய்துகொள்ள முயல்கின்றன. இதுவரையின் என்றுமில்லாத அளவு அதிக அளவில் ஈரான் வேறெந்த நாடுகளுக்கு விற்கமுடியாத தனது எரிநெய்க் கப்பல்களை வெனிசூவேலாவுக்கு அனுப்பியிருப்பதாகத் தெரியவருகிறது.
தற்போதைய நிலைமையில் சீனாவும், ரஷ்யாவும் கூட ஈரான், வெனிசுவேலாவின் மீதான அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் வங்கிக் கட்டுப்பாடுகளை மீறுவதைத் தவிர்க்கின்றன. எரிநெய்யில் மட்டும் தனது பொருளாதாரத்தை நகர்த்தாததால் ஈரானால் தொடர்ந்தும் அதைத் தயாரிக்கும் பலம் இருக்கிறது. வெனிசுவேலாவின் நிலைமையோ மிகவும் மோசமான இருக்கிறது. உலகின் மிகப்பெரிய எரிநெய் வளத்தைக் கொண்டிருந்தாலும் அந்தக் கிணறுகளை இயக்கும் பலமின்றி இருக்கிறது. அதனால், தனது நாட்டுக்குத் தேவைக்கான எரிநெய்யைக் கூட உறிஞ்ச முடியாத நிலையிலிருக்கிறது.
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஈரான் வெனிசூலாவுக்கு எரி நெய்யை விற்பதுடன் அவர்களுடைய செயற்படாமலிருக்கும் சில எண்ணெய்க் கிணறுகளுக்குத் தேவையான திருத்தங்களைச் செய்து அவற்றின் பொறுப்பை ஏற்கவும் முயற்சி செய்கின்றது. அதே உத்தேசத்துடன் முன்னரே முயற்சித்த சீனாவால் அதை நிறைவேற்ற முடியாமல் கைவிட்டுவிட்டது.
தற்போதைய தலைமைக்கு முன்னாலிருந்த வெனிசூவேல ஜனாதிபதியின் காலத்தில் எரிநெய் விலை உச்சக் கட்டத்திலிருந்ததால் அச்சமயம் உண்டாக்கிய வருமானத்தை வெனிசுவேலா தங்கமாக மாற்றி வைத்திருக்கிறது. தனது வறண்டு போயிருக்கும் கஜானாவை நிறைக்க ஈரானுக்கு அந்தத் தங்கம் அவசியமாக இருக்கிறது.
ஈரானிலிருந்து புறப்படும் எண்ணெய்க் கப்பல்களை அமெரிக்கா சர்வதேசக் கடலில் கைப்பற்றக் கூடிய அபாயம் இருக்கிறது. எனவே அக்கப்பல்கள் பயணத்தின் இடைவழியில் தமது தொலைத்தொடர்புகளைத் துண்டித்துவிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்