ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்ட ராமபுரம் பூங்காவனம் பொதுமக்களை ஈர்க்குமளவுக்கு அழகாக இருக்கிறதா?

அழகியல் சுற்றுப்புற சூழலைக்கொண்ட பூங்காவனம் [Ecological Hot spot] என்ற பெயரில் கடந்த வருடம் ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுத் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட ராமபுரம் பூங்கா இப்போது எவரையும் கவர எதுவுமில்லாமல் பாழாகிப்போய்க் கிடக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது.

1990 இல் சுமார் 27 ஏக்கரிலிருந்த அந்த ஏரி 2015 இல் வெறும் 4 ஏக்கராகக் குறுகிய பின்பே இந்த நடவடிக்கைகள் கிரேட்டர் சென்னை கோப்பரேஷனின் மாநில அழகுபடுத்தல் திட்டப்படி முகப்பூச்சு பூசப்பட்டது. அதற்கு முன்பு அவ்வேரி அப்பிராந்தியத்தில் வாழ்பவர்களின் குப்பை கொட்டும் இடமாக இருந்து வந்தது.

ராமபுரம் பூங்காவில் இப்போது நிலையாகப் பார்க்கக்கூடிய ஒரே ஒரு விடயம் இன்றைய மற்றும் முன்னாள் முதலமைச்சர்களின் படங்களுடன் கூடிய விபரங்களைக் கொண்ட விளம்பரப் பலகைகள் தான், என்று ராமபுரம் பிராந்திய சமூக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் போல் தாஸ் குறிப்பிடுகிறார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா எவ்வித கவனிப்புமின்றி இடிபாடுகளாக ஆரம்பித்தது. நடப்பதற்காக உண்டாக்கப்பட்ட பாதை ஆங்காங்கே உடைந்தது. எவரும் புற்பிரதேசங்களைத் துப்பரவாக்காமல் விட்டதால் புற்கள் உயர வளர்ந்து குப்பைகளாகின. 

சமீப காலத்துக் கடும் மழையும், நிவார் சூறாவளியும் சேர்ந்து பூங்காவை முழுவதுமாகப் பாவிக்க முடியாமல் செய்திருக்கின்றன. ஏரியின் கரைகளெல்லாம் இடிந்து சுற்றிவரக் கட்டப்பட்ட உடற்பயிற்சிக்காக நடக்கும் பாதை முழுவதுமாகவே சிதைந்துவிட்டது. 

சென்னை மாநகரசபையின் பூங்கா அழகுபடுத்துதல் பகுதியினர் உதவினால் மீண்டும் அப்பூங்காவை ஒழுங்காக்க விரும்புவதாக ராமபுரம் பிராந்திய சமூக முன்னேற்றக் கழகத்தினர் தெரிவிக்கிறார்கள். அதன் பின்னர் அப்பூங்காவைத் தொடர்ந்தும் சென்னை மாநகரம் பேணிவரவேண்டும், அதன் மூலமே பல்லாயிரக்கணக்கானவர்கள் அப்பூங்காவைப் பாவிக்க வசதியாக இருக்கும் என்றும் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *