இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.
தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேறும்படி நெதர்லாந்து உத்தரவிட்டது.
செயற்கை அறிவுத்திறனூட்டும் தொழில்நுட்பங்களைச் சார்ந்த நிறுவனமொன்றில் விபரங்களைப் பெற்றுக்கொள்ள குறிப்பிட்ட ரஷ்யரொருவர் சிலருக்கு பணத்தொகையைக் கொடுத்திருப்பதாக நெதர்லாந்தின் உளவுத்துறை குறிப்பிடுகிறது.
2014 இல் ஆம்ஸ்டர்லாமிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட MH17 விமானத்தை உக்ரேனுக்கு மேல் வைத்துச் சுட்டு விழுத்தியது ரஷ்யாவே என்று குறிப்பிட்டிருக்கிறது நெதர்லாந்து. அவ்விமானத்தில் இறந்துபோன 298 பேரில் 196 பேர் நெதர்லாந்தின் குடிமக்கள். தொடர்ந்தும் அவ்விபத்தில் தனக்குச் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்டு வருகிறது ரஷ்யா. அவ்விரண்டு நாடுகளிடையேயும் அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
நெதர்லாந்தின் கோபமூட்டும் செயலுக்கு ஈடான பதிலடி கொடுப்போம் என்று ரஷ்ய வெளிவிவகாரத்துறை தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ.போமன்