பிரெக்சிஸ்ட் க்கு பின்னரான ஒப்பந்தங்கள் – இன்னும் வெகு தொலைவில் – பிரதமர் பொறிஸ்
பிரெக்சிட்-க்கு பின் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இடம்பெறப்போகும் ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய விடயங்களில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் “இன்னும் வெகு தொலைவில் தான் உள்ளன” என்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்திருக்கிறார்.மேலும் உலக வர்த்தக அமைப்பின் கொள்கைகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய ஐக்கிய இராச்சியம் தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டேர் லேயன் ஆகியோர் ஏற்கனவே விதிக்கப்பட்ட காலக்கெடுவாகிய இன்றைய ஞாயிற்றுக்கிழமையைத் தாண்டி வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு கூட்டு அறிக்கையில், “இந்த முக்கியமான காலகட்டத்தில் கூடுதலாக மைல் செல்லவேண்டிய இந்த கட்டத்தில் எம் பொறுப்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தொலைபேசி அழைப்பின் போது “தீர்க்கப்படாத முக்கிய தலைப்புகள்” பற்றி விவாதித்தது என்றும் அந்த உரையாடலை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் வோன் டேர் லேயன் “ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள உரையாடல் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் தற்சமயம் மூன்று முக்கியமான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக மீன்பிடி உரிமைகள் மற்றும் வர்த்தக தொழில்துறைக்கு அரசாங்கத்தின் ஆதரவு, மற்றும் ஒப்பந்தங்களை கையாளுவது அதை செயற்படுத்துவது போன்ற விடயங்களில் தீர்வுகளை எட்டமுடியாது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஏற்கனவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனவரி 31 அன்று இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியமையும் ஆனால் இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே அதன் வர்த்தக விதிகளின் கீழ் ஐக்கிய இராச்சியம் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.