சொந்த நாட்டில் கொள்ளையடித்து பிரான்ஸில் சொத்துச் சேர்த்த எகுவடோரியல் கினியாவின் ஜனாதிபதிக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
பாரிஸில் அதிமுக்கிய இடத்தில் அமைந்திருக்கும் கட்டடம் ஒன்று யாருக்குச் சொந்தம் என்று, பிரான்ஸ் அரசுக்கும் எகுவடோரியல் கினியாவுக்கும் ஏற்பட்ட சர்ச்சையில் அது பிரான்ஸுக்கே உரியதென்று சர்வதேச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தக் கதையின் நாயகன் தியடொரின் என்றழைக்கப்பட்ட எகுவடோரியல் கினியாவின் உப ஜனாதிபதியாக இருந்த தியடொரோ ஒபியாங் ங்குவெமா மங்கு என்ற பிரசித்தி பெற்ற உல்லாசப் பிரியராகும். இரும்புக்கரம் கொண்டு நாட்டை ஆண்ட தியடொரோ ஒபியாங் ங்குவெமா [தந்தையின் பெயரும் அதுவே] என்பவரின் மகனாகும்.
மகன் தியடொரோ ஒபியாங் ங்குவெமா முதலில் அமைச்சராகவும் பின்னர் உப ஜனாதிபதியாகவும் ஆக்கப்பட்டார். எரி நெய் வளமுள்ள நாட்டில் கொள்ளையடித்த செல்வத்தை பாரிஸில் வாழ்ந்து உலகின் பல நாடுகளுக்கும் உல்லாச விமானங்களிலும், கப்பல்களிலும் பயணித்து வாழ்ந்து வந்தார் மகன் தியடொரின். இவரிடம் லட்சக்கணக்கில் விலையுள்ள பல வித வாகனங்களும் இருந்தன. பாரீஸில் Avenue Foch இல் சுமார் 107 மில்லியன் எவ்ரோக்கள் விலையுள்ள உல்லாச வீடொன்றை வாங்கியிருந்தார். சினிமா, ஸ்பா, அழகு நிலையம் போன்றவைகளுடன் ஆங்காங்கே தங்கத்தால் இழைக்கப்பட்டது அந்த வீடு.
தனது நாட்டைக் கொள்ளையடித்து உல்லாசமாக வாழ்ந்து வரும் தியடொரின் மீது அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளிலும் கள்ளப் பணமும், வேறு செல்வங்களும் ஒளித்து வைத்திருப்பதாக வழக்குக்கள் போடப்பட்டு பல மில்லியன்கள் புடுங்கப்பட்டும் உள்ளன.
அதே போலவே பிரான்ஸில் 2016 இல் குறிப்பிட்ட உல்லாச வீடும், உலகின் மிக விலையுயர்ந்த உல்லாசப் படகு, உல்லாசக் கார்கள் உட்பட அவ்வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ஏகப்பட்ட பணம், நகைகள் போன்றவை பறிக்கப்பட்டு சுமார் 33 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டது.
அப்பாவுக்குப் பின்னர் தற்போது எகுவடோரியல் கினியாவின் ஜனாதிபதியாகி விட்ட தியடொரின் பிரான்ஸ் செய்தது தவறு, குறிப்பிட்ட சொத்து தனது நாட்டின் தூதுவராலயத்துக்குரியது என்று கோரி தனது நாட்டின் சார்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார்.
அந்த வழக்கில் டிசம்பர் 11ம் திகதியன்று சர்வதேச நீதிமன்றம் பிரான்ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்