கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.
தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின். “உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவதற்காகக் காத்திருக்கிறேன்,” என்று புத்தின் வாழ்த்தினார்.
“எங்களிடையே பல கருத்து வேறுபாடுகளிருப்பினும் இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங்களிருவருக்கும் பாரிய பொறுப்புண்டு. அவ்விடயங்களில் சேர்ந்து பணியாற்ற வாருங்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார் புத்தின்.
14ம் திங்களன்று ஜனாதிபதியை அதிகாரபூர்வமாகத் தெரிந்தெடுக்கும் வாக்குகளை அளிக்கும் எலெக்டர்கள் கூடி ஜோ பைடனைத் தெரிவு செய்ததாக அறிவித்த பின்னரே புத்தின் ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்குப் பின்னர் டிரம்ப் எழுப்பிய பிரச்சினைகளைக் குறித்து ஏற்கனவே ரஷ்யா “அமெரிக்கத் தேர்தல் சிக்கலானது, மக்களின் உண்மையான விருப்பங்களைப் பிரதிபலிப்பதில்லை,” போன்ற விமர்சனங்களைத் தெரிவித்திருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்