டிரம்ப்பின் அரசாங்கத்திலிருந்து கழன்றுகொள்ளும் அடுத்த நபராக நீதியமைச்சர் வில்லியம் பர்.
தனது அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தான் விலகிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார் அமெரிக்காவின் நீதியமைச்சர் வில்லியம் பர். நத்தாருக்கு முன்னராக அவர் பதவியிலிருந்து விலகிக்கொள்வார்.
“நீண்ட காலமாக நானும் நண்பர் பில்லும் சேர்ந்து பணியாற்றினோம். அவர் தனது பணிகளை மிகவும் திறமையாகச் செய்து வந்தார். சற்று முன் நாங்கள் சந்தித்தபோது பதவியிலிருந்து விலகித் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடவிருப்பதாக அவர் தெரிவித்தார்,” என்று டுவீட்டினார் டிரம்ப்.
டிரம்ப்பின் நீண்டகால ஆதரவாளராக இருந்த வில்லியம் பர் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவித குழப்பங்களும் நடக்கவில்லை என்று ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். அதைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப் தொடர்ந்தும் தான் வெற்றி பெற்றதாகவே கூறி வருகிறார்.
அத்துடன், வரவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி ஓரிரு வருடங்களாகவே நீதியமைச்சு விசாரித்து வருவது சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அவ்விபரத்தைத் தேர்தலின் முன்னரே டிரம்ப் அறிந்துகொள்ள விரும்பியும் வில்லியம் பர் வெளிப்படுத்தாததும் டிரம்ப்பை மேலும் ஆத்திரமடைய வைத்திருந்தது. பைடனின் மகன் பற்றிய விசாரணையைப் பிரயோகித்து பைடனைத் தேர்தலில் விமர்சிக்கும் சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கவில்லையென்று கோபத்துடன் இருக்கிறார் டிரம்ப். அவ்விடயம் வில்லியம் பர்ருக்கும் டிரம்ப்புக்குமிடையே பிரிவினையை மேலும் ஆழமாக்கியது.
தற்போது உப நீதியமைச்சராக இருக்கும் ஜெப் ரொஸன் நத்தார் தினத்துக்கு முதன் நாளிலிருந்து நீதியமைச்சர் பொறுப்பைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்வார் என்று ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்