தனது நாட்டோ சகபாடிக்கெதிராக பொருளாதாரத் தடைகளைப் போடுகிறது அமெரிக்கா.
டிரம்ப் பதவிக்கு வரமுன் நீண்டகாலமாகப் பெரும்பாலும் அமெரிக்காவிடம் தனது பாதுகாப்பு அமைப்புக்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்துவந்த நாடு துருக்கி. சமீப கால மனக்கசப்புக்களால் ரஷ்யாவிடம் தனது தூரத் தாக்குதல் ஆயுத அமைப்பையும், தளபாடங்களையும் செய்தது.
சிரியாவில் ஏற்பட்ட போர்க்காலத்தில் உண்டாகிய நிலைமைகளினால் அமெரிக்காவுடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசலும் அதே சமயம், சிரிய மண்ணில் ரஷ்யாவுடன் அனுசரிக்கும் நிலையும் ஏற்பட்டதால் உண்டாகிய நட்பால் அமெரிக்காவால் மறுக்கப்பட்ட ஆயுத அமைப்புக்களுக்கு இணையானவையை ரஷ்யாவிடம் கொள்வனவு செய்துகொண்டது துருக்கி.
தனது தொழில்நுட்பத்திலியங்கும் ஆயுத அமைப்புக்களை ரஷ்ய ஆயுதத் தளபாடங்கள் [S-400], ஆயுதங்களுடன் சேர்த்துப் பாவிக்கும் துருக்கியால் தனது தொழில்நுட்பங்களின் இரகசியங்களுக்குப் பங்கம் வரலாம் என்று கருதி துருக்கியின் மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று வெளிவிவகார அமைச்சர் மைக் பம்பியோ அறிவித்தார். அமெரிக்காவின் செயலை உடனடியாகக் கண்டித்த துருக்கி அத்தடைகளை உடனடியாக வாபஸ்வாங்கும்படி கேட்டிருக்கிறது.
“நீங்கள் எடுத்திருக்கும் முடிவு தவறானது என்று உணர்வீர்கள். அதற்கு பதிலடியாக நாங்கள் எங்களால் எடுக்கக்கூடிய முடிவுகளை எடுக்கும் உரிமை எங்களிடம் இருக்கிறது,” என்று பதிலளித்திருக்கிறது துருக்கி. “அமெரிக்காவின் செயல் நேர்மையானவைகள் அல்ல, அவைகள் அவர்களின் திமிரையே காட்டுகின்றது,” என்று ரஷ்யா தன் பங்குக்குக் கண்டித்திருக்கிறது.
அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டுப்பாடுகள் துருக்கியின் நிறுவனங்கள், முக்கிய தலைவர்கள் மற்றும் துருக்கியின் பாதுகாப்பு அமைச்சின் கொள்வனவு நிறுவனம் ஆகியவையைத் தாக்குகின்றன.
குறிப்பிட்ட நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவின் அல்லது அமெரிக்காவின் நட்பு நாடுகளின் வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் அவர்களுடைய சொத்துகள் கைப்பற்றப்படும். குறிப்பிட்ட நபர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்கள் மறுக்கப்படும்.
நாட்டோ அமைப்பிலிருக்கும் தனது சகபாடி நாடுகளுடன் சேர்ந்து தனது F-35 போர் விமானத் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தி வருகிறது அமெரிக்கா. ரஷ்யாவின் தொழில் நுட்பம் கொண்ட S-400 போர்த் தளபாட அமைப்புக்களை வாங்கிய துருக்கியை அந்தக் கூட்டுறவில் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது.
சாள்ஸ் ஜெ. போமன்