சுவாசிக்கும் காற்றிலிருக்கும் நஞ்சு ஒரு சிறுமியின் இறப்புக்குக் காரணமென்று லண்டன் நீதிமன்றமொன்று தீர்ப்பளித்திருக்கிறது.
பிரிட்டனின் சரித்திரத்தில் முதல் தடவையாக ஒருவரின் இறப்புக்கு அந்த நபர் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் நச்சுத்தன்மையே காரணமென்று தீர்ப்பளித்திருக்கிறது லண்டனின் நீதிமன்றமொன்று. இத்தீர்ப்பு ஒரு ஒன்பது வயதுச் சிறுமியின்[Ella Kissi-Debrah] இறப்பு பற்றியதாகும்.
2013 ம் ஆண்டு இறந்துபோன குறிப்பிட்ட சிறுமி மிகவும் போக்குவரத்துக்குள்ளாகும் வீதியொன்றருகில் வாழ்ந்து வந்தாள். அங்கிருந்து அவள் வழக்கமாகப் பாடசாலைக்குப் போகும் வழியிலும் அக்காற்றைச் சுவாசிக்கவேண்டியிருந்தது.
இறந்துபோகும் வருடம் முழுவதும் அச்சிறுமி மீண்டும் மீண்டும் ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாகினாள். அதனால் அவளது சுவாசப் பிரச்சினைக்காக அடிக்கடி மருத்துவசாலைக்கு எடுத்துச் செல்லவேண்டியதாயிற்று.
சிறுமியின் தாய் தனது மகளின் இறப்புக்கு அவள் சுவாசித்த காற்றின் நச்சுத்தன்மை ஒரு முக்கியமான காரணி என்று அரசுக்கெதிராக வழக்குப் போட்டார். ஆறு வருடங்களுக்கு முதல் நீதிமன்றத்தில் அவருக்குத் தோல்வியே கிடைத்தது. ஆனாலும், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று அங்கே இன்றைய தீர்ப்புப்படி சிறுமியின் இறப்புக்கு அவள் வாழுமிடத்தில் சுவாசித்த காற்றிலிருக்கும் NO2 தான் அதிமுக்கிய காரணம் என்று தீர்ப்பாகியிருக்கிறது. வருடாவருடம் பிரிட்டனில் சுமார் 36,000 பேரின் இறப்புக்கு சுவாசிக்கும் நச்சுக் காற்றே காரணமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பு லண்டனுக்கு மட்டுமின்றி உலகின் சகல மக்களுக்கும் ஒரு முக்கியமான வெற்றி என்று கருதப்படுகிறது. இதேபோன்று இன்று மோசமான சுவாசிக்கும் காற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் அதற்கான விஞ்ஞானபூர்வமான காரணத்தை நிரூப்பிக்க நீதிமன்றத்திடம் போகலாம். அரசுகளும் தத்தம் பிராந்தியத்திலிருக்கும் நச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க அவசியத்தை இத்தீர்ப்பு உண்டாக்கியிருக்கிறது. லண்டன் நகரபிதா சாதிக் கான் தீர்ப்பைப்பற்றி இப்படிச் சொல்லியிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்