“கொவிட் 19 பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை,” என்கிறார் பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர்.
ஒரு வாரத்துக்கு முன்னர் கவனிக்கப்பட்ட ஒரு புதிய வகையான கொவிட் 19 கிருமி முன்னரை விட வேகமாகப் பரவி வருவது பற்றி எச்சரிக்கைகள் வந்துகொண்டேயிருந்தன. இன்று காலை பிபிசி நிகழ்ச்சிக்குப் பேட்டியளித்த பிரிட்டிஷ் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் மட் ஹான்கொக் தற்சமய நிலபரத்தை வைத்துக் கவனிக்கும்போது கொரோனாப் பரவல் எங்கள் கட்டுப்பாட்டிலில்லை என்று கவலையுடன் குறிப்பிட்டார்.
“இது பற்றி நான் மிகவும் விசனமாக இருக்கிறேன். எங்கள் நாட்டு பொது மருத்துவ சேவையிடம் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெறுவோர் நிலை இவ்வருட இலைதுளிர்கால எண்ணிக்கையை நெருங்கிவிட்டது. அதனால் அப்பரவலைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசரம்,” என்கிறார் மட் ஹாங்கொக்.
லண்டன், பெரும்பாலான பிரிட்டனின் தென்கிழக்குப் பிராந்தியம், வேல்ஸ் மாகாணம் முழுவதுமே “வீட்டுக்குள்ளே இருங்கள்” என்ற மிகக் கடுமையான கொரோனாக் கட்டுப்பாட்டு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்