20 வருடங்கள் சிறையில் கழித்தபின் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட தென்கொரியர்.
தென்கொரியாவில் சுவோன் என்ற நகரில் 1986 – 1991 இடையில் நடந்த ஆகக்குறைந்தது பத்துக் கற்பழிப்புக் கொலைகளுக்குக் காரணமானவன் என்று சிறையில் 20 வருடங்கள் இருந்தபின் யூன் செயோன் யியோ ஒரு நிரபராதியாகக் காணப்பட்டு விடுதலை செய்யப்பட்டான்.
Hwaseong murders என்றழைக்கப்பட்ட அந்தத் தொடர்கொலைகளில் ஒன்றைச் செய்ததாகக் கைதுசெய்யப்பட்டு பொலீஸாரல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, சோடிக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தற்போது 50 வயதான யூன் செயோன் யியோ அந்தத் தொடர்கொலைகளின் கொலையாளியாக்கப்பட்டார். 1988 இல் நடந்த ஒரு 13 வயதுச் சிறுமியின் கற்பழிப்புக்கொலையில் அவரைக் கைதுசெய்து தவறான முறைகளில் அவர்மீது பழிகளைச் சுமத்தியதற்காகத் தான் நீதித்துறையின் சார்பில் வெட்கத்துடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக இப்படியான வழக்குகளில் மறுவிசாரணைக்கு அனுமதிக்காத தென்கொரியாவில் யூன் பல தடவைகள் கேட்டும் அது மறுக்கப்பட்டது. ஆனால், வேறொரு விசாரணையொன்றில் வெளிவந்த விபரங்களை வைத்து ஆராய்ந்ததால் வந்த உண்மைகளின் அடிப்படையில் இவரது வழக்கு மறுபரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
செப்டம்பர் மாதமளவில் குறிப்பிட்ட பத்துக் கொலைகளில் ஒரு சில கொலைகள் நடந்த இடங்களிலிருந்து பெறப்பட்ட மரபணு விபரங்கள் மூலம் அக்கொலைகளைச் செய்த லீ என்பவன் வேறொரு கற்பழிப்புக் கொலைக்காக 1994 லிருந்து சிறையிலிருப்பது தெரியவந்தது.
அவனைத் தொடர்ந்து விசாரித்ததில் அவன் தான் குறிப்பிட்ட தொடர்கற்பழிப்புக் கொலைகாரன் என்பதை அவன் ஒத்துக்கொண்டான். அந்த அடிப்படையில் தான் தென்கொரிய நீதிமன்றம் யூனின் வழக்கை மீள் பரிசீலனை செய்து அது சம்பந்தப்பட்ட விடயங்களை விசாரிக்க ஆணையிட்டது. அவ்விசாரணையில் யூன் எப்படியெல்லாம் பொலீசாரால் நடாத்தப்பட்டான், கொடுமையாக நடத்தப்பட்டான் என்ற உண்மைகள் வெளிவந்தன.
போலியோவால் பாதிக்கப்பட்ட யூன் ஒரு காலில் ஊனமும் கொண்டவனாக இருந்தும் அதைப் பற்றிப் பொலீசார் கிஞ்சித்தும் கவனம் கொள்ளாமல் பல நாட்களாகத் தூங்கவிடாமல், பட்டினிபோட்டுத் துன்புறுத்தினார்கள் போன்ற விபரங்கள் வெளிவந்தன. 30 வருடங்களுக்கு முன்னர் பொலீசார் விசாரணைகளில் கையாண்ட விதங்கள் தென்கொரியாவை அதிரவைத்திருக்கிறது. தன்மீதிருந்த களங்கம் விசாரணைகளின் பின்னர் துடைக்கப்பட்டதுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் யூன்.
சாள்ஸ் ஜெ. போமன்