வெனிசுவேலா அகதிகளுக்கு கொலம்பியாவில் தடுப்பு மருந்து கிடையாது.
கொலம்பியாவில் வசித்துவரும் சுமார் 1.7 மில்லியன் வெனிசுவேலா அகதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட மாட்டாது என்கிறார் கொலம்பியாவின் ஜனாதிபதி. இவான் டுக்கேயின் இந்த அறிவிப்பை நாட்டின் எதிர்க்கட்சிகளும், மனித உரிமைக் குழுக்களும் பலமாக எதிர்க்கின்றன.
“எங்களுடைய முக்கிய குறிக்கோள் எங்கள் நாட்டு மக்களைக் காப்பாற்றுவதாகும். இலவசமாக நாம் அகதிகளுக்குத் தடுப்பு மருந்தைக் கொடுப்போமானால் மேலும் பல்லாயிரக்கணக்கான பக்கத்து நாட்டவர்கள் எங்களிடம் இலவச மருந்து பெற்றுக்கொள்ள வந்துவிடுவார்கள்,” என்கிறார் ஜனாதிபதி.
கடந்த சில வருடங்களாகவே மிகப்பெரும் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளால் வெனிசுவேலா தாக்கப்பட்டு வருகிறது. வெனிசுவேலா அரசின் அமெரிக்க எதிர்ப்பு நடவடிக்கைகளால் நாடு தனிமைப்படுத்தப்பட்டுப் பொருளாதாரக் கட்டுபாடுகளால் முடக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஐந்து மில்லியன் வெனிசுவேலா மக்கள் அகதிகளாகப் பக்கத்து நாடுகளுக்குத் தப்பியோடியிருக்கிறார்கள்.
வெனிசுவேலா மக்களை எல்லைகளைத் திறந்து வரவேற்றவர்களில் முக்கியமானவர் கொலம்பியாவின் ஜனாதிபதியாகும். அவர் தற்போது அம்மக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுக்கமாட்டேன் என்று சொல்வதை வென்சுவேலாவின் எதிர்க்கட்சிகள் வரவேற்கின்றன. மற்றைய தென்னமெரிக்க நாடுகளில் வாழும் வெனிசுவேலா மக்களை விட கொலம்பியாவில் வாழ்பவர்கள் அங்கே பல வகைகளிலும் துன்புறுத்தப்படுவதாகப் பல குற்றச்சாட்டுக்களும் ஏற்கனவே கிளம்பியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்